பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 335 |
(3) செருப்பாழி எறிந்தவன் இளம்பெருஞ்சென்னி என்ற பெயரில் வேறுபாடு உடையவனாகக் காணப்படுகிறான்.17 இவற்றை ஒப்பிட்டு எண்ணும்போது, இளம்பெருஞ்சென்னி அண்ணன் என்றும், இளம்சேட்சென்னி தம்பி என்றும் கருதுவது மிகப் பொருத்தமான முடிவாய் அமைவதைக் காணலாம். உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி’பொலந்தேர்மிசைப் பொலிவுடன் தோன்றினான்’ என்றும், ‘நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி இயல்தேர்ச் சென்னி’ என்றும் தேரால் சிறப்பித்துக் கூறப் பட்டுள்ளனர். பொலந்தேர் என்பது பொன்னலாகிய அழகிய தேர் ஆதலின் உருவப் (அழகிய) பல்தேர் என வழங்கப்படுதல் இயல் பாகும். இயல்தேரை உருவப் பல்தேர் என்று கொள்வது அத்துணைச் சிறப்பில்லை. எனவே, இயல்தேர்ச் சென்னி என்று குறிப்பிடப்படும் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி வேறு; உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி வேறு என்று நாம் கொள்கிறோம். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் இவர்களுடைய மக்களின் வரலாறும் அமைந்துள்ளமையை அடுத்துக் காணலாம். கரிகால் பெருவளத்தான் கரிகாலன் என்னும் பெயருடைய சோழ அரசன் சங்க காலத் தில் ஒருவன்தான் இருந்தான். அவனுக்குப் பல்வேறு வகையில் வழங்கிவந்த பெயர்களும், அவனது பல்வேறு செயல்களும் பல்வேறு பாடல்களில் பல்வேறு புலவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை யெல்லாம் திரட்டி ஒப்புநோக்கும் போது கரிகாலன் என்னும் அரசன் ஒருவன்தான் இருந்தான் என்பது பெறப்படுகிறது. பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் உள்ள பட்டினப்பாலை என்னும் பாட்டைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்; பொருநராற்றுப்படை என்னும் பாட்டைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார். இவர்களது இந்தப் பாட்டுகள் கரிகாலன்மீது பாடப் பட்டவை. இவர்களால் பாடப்பட்டுள்ள கரிகாலன் ஒருவனே என்பதை அந்தப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அவனது பெயர்களை நோக்கி அறியலாம்.
17. அகம். 375 : 10 - 13 |