336 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
‘திருமாவளவன்’,1, ‘கரிகாலன்’,2 ‘சோழன் கரிகாற் பெருவளத் தான்’,3 ‘பெருவளக் கரிகால்’,4 கொளுக்குறிப்பு, பத்துப்பாட்டைத் தொகுத்தவரால் தரப்பட்டது. இவர் அந்தப் பாட்டுகள் பாடப்பட்ட காலத்தவர் அல்லது நம் எல்லோரையும் காட்டிலும் பாட்டுகள் தோன்றிய காலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர். எனவே, இவர் ஒரே பெயரை இரண்டு பாட்டுகளின் தலைவனுக்கும் குறிப்பிடுவதால் இவற்றில் கூறப் பட்டவன் ஒருவனே என்பது தேற்றம். கரிகாலனைப்பற்றிப் பாடப்பட்ட பாடல்கள் புறநானூற்றில் நான்கு உள்ளன. அவற்றைப் பாடிய புலவர்கள் மூன்று பேர். இந்த நான்கு பாடல்களுக்கும் தரப்பட்டுள்ள கொளுக் குறிப்பில் கரிகாலனது பெயர் ‘சோழன் கரிகாற் பெருவளத்தான்’ என்றே உள்ளது. இந்தக் கொளுக் குறிப்பைத் தந்தவர் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர். புறநானூற்றைத் தொகுத்தவரும் பத்துப்பாட்டைத் தொகுத்தவரும் ஒருவரா, இருவேறு அறிஞரா என்பது நமக்குத் தெரியாது. எப்படி யாயினும் குறிப்புகள் எல்லாம் ‘சோழன் கரிகாற் பெருவளத்தான்’ என்னும் ஒரே பெயரையே கையாளுகின்றன. கரிகாலனைப்பற்றிக் கருத்துகள் தரும் அறிஞர்கள் எல்லோரையும்விட இந்தக் கொளுக் குறிப்புத் தந்தவர் கரிகாலன் காலத்தோடு நெருங்கிய தொடர் புடையவர். எனவே, புறநானூற்றிலும் பத்துப் பாட்டிலும் குறிப்பிடப் பட்ட அரசன் ஒருவனே ஆவான். இவை பெயரால் தெரியவரும் உண்மை. ஒரே பெயர்கொண்ட பலர் இருந்திருக்கலாம் அல்லவா என்றும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். கரிகாலன் நடத்திய போர்களில் ஒன்று வெண்ணிப்போர். இந்தப் போர் பொருநராற்றுப்படை, புறநானூறு, அகநானூறு ஆகிய மூன்று நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது. எனவே, ஒரே போரை நடத்திய கரிகாலனை வேறுவேறு அரசர்கள் என்று கொள்ள முடியவில்லை.
1. பட்டினப், 299; பொருநர், வெண்பா; திருமாவளவனை இரண்டாம் கரிகாலன் என்பர். 2. ௸ வெண்பா; ௸ 3. ௸ கொளு; பொருநர், கொளு. 4. அகம். 125 : 18 |