பக்கம் எண் :

338மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

இவனது நாட்டில் இருந்த தாகவும்11 குறிப்பிடும் பாடல்களும் உள்ளன. கழார்த் துறையும் இடையாற்றுப் பகுதியும் இப்போதுள்ள தஞ்சை மாவட்டப் பகுதியில் அப்போது இருந்தவை. இப்போது நாமக்கல் வட்டத்தில் உள்ள இடையாறு என்னும் பழமைச் சிறப்பு வாய்ந்த ஊரும் காவிரிக் கரையில் உள்ளது. பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள இடையாறு என்று கொண்டாலும் எல்லா வகையிலும் பொருந்தும்.

கரிகாலனின் முன்னோன்12

கரிகாலனின் முன்னோன் ஒருவன் கடலில் தனது கப்பல்களை ஓட்டினான். அவை பாய்மரக் கப்பல்கள், காற்றின் விசையால் அவை முன்னும் பின்னும் வேண்டிய இடங்களுக்கு ஓட்டிச் செல்லப்பட்டன. இவனது காலத்திற்குமுன் கடலில் மரக்கலங்கள் துடுப்புகளின் உதவியைக் கொண்டு தள்ளியே ஓட்டப்பட்டன. இவன்தான் முதன் முதலில் பருவக்காற்றைப் பயன்படுத்தி அதன் விசையால் கப்பல்களைத் தாமே இயங்கும்படி செய்தான். இதனால் இவன் ‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன்’ என்று குறிப்பிடப்பட்டான்.

இவ்வாறு இவன் ஓட்டிச் சென்ற கப்பல்கள் வெளிநாட்டு வாணிகத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவன் வழியே கரிகாலனது கப்பல்களும் புலிபொறித்த பண்டங்களுடன் சென்று வாணிகம் செய்திருக்கலாம் அல்லது இந்த உரவோனின் கப்பல் வெளிநாட்டுச் செலவுகட்குப் பயன்பட்டிருக்கலாம்.

சேர அரசன் வானவன்13 கப்பல் ஓட்டி வாணிகம் செய்ததையும், நெடுஞ்சேரலாதனின் கடற்போர் வெற்றிக்குக் கப்பல்கள் பயன்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என்பதையும் நாம் இங்கு நினைவுகூரலாம். சேரர் கப்பல்கள் அரபிக்கடலிலும். சோழர் கப்பல்கள் வங்காளக் குடாக் கடலிலும் மிதந்து மேலைநாடுகளோடும் கீழைநாடுகளோடும் வாணிகம் செய்து வந்தன. கரிகாலன் காற்று விசையைத் தன் கப்பலுக்குப் பயன் படுத்திய உரவோனின் வழிவந்தவன் என்று குறிப்பிடப்படுகிறான்.


11. ௸ 141 : 23