340 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
சிறப்பான தொடரால் அவரது பெயரைக் குறிப்பிட்டுருக்கிறார் என்பதே அந்த உண்மை. இத்தகைய இரும்பிடர்த் தலையாரைத் தாய்மாமன் என்று ஒருவர் குறிப்பிடுவாரேயானால், அந்தக் குறிப்பு அவரது பெயர்க் குறியீட்டில் அமைந்த கற்பனை போலவே அமைந்தது என்று கொள்வதைவிட வேறு வழியில்லை.16 கரிகாலன் எவ்வாறு அரியணையேறினான் என்பதைப் பட்டினப் பாலை குறிப்பிடுகிறது.17 உவமையாலும் பொருள் விளக்கத்தாலும் அது தெளிவாகக் குறிப்பிடுகிறது. குட்டி வரிப்புலி கூட்டில் வளர்வதுபோல் இவன் பிறருடைய காப்பில் வளர்ந்தான். பருவம் வந்ததும் இவன் வெளிப்பட்டான். பொய்க்குழியில் அகப்பட்டுக் கிடந்த ஆண்யானை அந்தக் குழியின் கரைகளைக் குத்திச் சரித்துவிட்டுத் தானே மேடேறிச் சென்று தன் பெண்யானையோடு சேர்ந்து கொள்வதுபோல, இவன் இவனது காப்புக் கூட்டைச் சிதைத்துவிட்டு அதாவது, தனக்குத்தானே விடுதலையை உண்டாக்கிக் கொண்டு வாளை உருவிக் கையிலேந்திய கோலத்துடன் வந்து தனது மரபுரிமையாகிய அரசபதவியைத் தானே எடுத்துக் கொண்டான். பட்டினப்பாலையில் கூறப்பட்டிருக்கும் இந்தச் சினக் கோலம் ‘முருகற் சீற்றத்து உருகெழு குருசில்’ என்று பொருநராற்றுப் படையிலும் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இவனுக்குக் கிடைத்த அரச பதவி அமைதியானது அன்று. அது அச்சந்தரும் அரச பதவி18 யாகும். இவனும் அமைதியாக அரியணை யேறவில்லை. மேனி யெல்லாம் கனல்பொறி பிறந்து சிவந்து தோன்றும் பேரச்சம் தரும் உருவோடு19 இவன் அரியணையேறிய வரலாறு இவ்வாறு தெளிவாக இருக்கும்போதே, பட்டத்து யானை மாலை சூட்டி அழைத்துவந்த கற்பனைக் கதைகள் வழங்கிவருவது வியப்பிற் குரியதாகும்.
16. இக் கருத்தினை ஏற்றுக் கொள்ள இயலாது. பழமொழி நானூற்றில் (239 : 1 - 2) ‘சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்று’ என வருகிறது. இந்தப் பிடர்த்தலையாரை நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர் கரிகாலனுடைய தாய்மாமன் எனச் சுட்டுகிறார், (ப-ர்) 17. பட்டினப். 220 - 227 18. ‘உருகெழு தாயம்’ (பட்டினப். 227) 19. ‘உருகெழு குருசில்’ (பொருநர். 131) |