பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்341

கரிகாலும் கால்நெருப்பும்

கரிகாலன் உறையூர்க் கோட்டையில் இரவில் உறங்கிக் கொண் டிருந்தபோது அவனது பகைவர்கள் கோட்டைக்குத் தீ மூட்டிவிட்டார் களாம். கரிகாலன் தீயிலிருந்து தப்பி வெளிவந்த போது அவனது கால் கருகிப் போயிற்றாம். அதுமுதல் ‘கரிகாலன்’ என்னும் பெயருடன் அவன் அழைக்கப்பட்டானாம்.20

இந்தத் தீ நிகழ்ச்சியில் தப்பிப் பிழைத்த கரிகாலன் தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தானாம். மக்கள் அரசனைக் காணாது வருந்தித் தேடிமுயன்றும் கிடைக்காமையால் பட்டத்து யானையின் துணைகொண்டு தக்கான் ஒருவனைத் தேர்ந்தெடுக்க முயன்றார்களாம். அதன்படி அவர்கள் பட்டத்து யானையின் கையில் மாலையைக் கொடுத்து அனுப்பி அந்த மாலையை அது யாருக்குச் சூட்டிவிடுகிறதோ அவனையே அரியணையேற்றுவதென்று முடிவு செய்து யானையை அனுப்பினார்களாம். யானை தேடிச்சென்று கால் நெருப்புப் பட்டு அடையாளம் மாறியிருந்த கரிகாலனுக்கு மாலை சூட்டியதாம்21 மாலை சூட்டப்பட்டவன் உண்மையான அரசன் கரிகாலனே என்பதை உணர்ந்து மக்கள் பெரிதும் மகிழ்ந்து ஏற்றார்களாம்.

வெண்ணிப் போர்22

வெண்ணி23 என்னும் ஊரின் வாயிலை அடுத்திருந்த வெளியில் கரிகாலன் அவனது பகைவர்களை எதிர்த்துத் தாக்கினான். ஊர் வாயிலில் போர் நடைபெற்றதால் வெண்ணி வாயிலில் நடை பெற்றது என்றும், அந்த வாயில்வெளி போர்ககளமாகப் பயன் படுத்தப்பட்டதால் வெண்ணிப் பறந்தலையில்24 போர் நடைபெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


20. பட்டினப். வெண்பா

21. பழமொழி. 230

22. பொருநர். 143 - 148; புறம். 65, 66 : 6; அகம். 55 : 10, 246: 9 - 10

23. கோயில் வெண்ணி - தஞ்சை மாவட்டம், வெண்ணில் என்பது வெண்ணி என மருவியுள்ளது.

24. போர் நடைபெற்ற முரம்பு நிலம்