342 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
வெண்ணிப் போர் கரிகாலன் இளைஞனாய் இருந்தபோதே நடத்திய போர் என்பதைப் பொருநராற்றுப்படை தெளிவாகக் குறிப்பிடுகின்றது. வெண்ணியில் கரிகாலனை எதிர்த்துத் தாக்கியவர்களுள் பதினொரு குலத்தலைவர்களும் இருபெரு வேந்தர்களும் அடங்கி யிருந்தனர். இந்தப் பதினொரு வேளிர் யார்? அவர்களுடன் சேர்ந்து போரிட்ட பாண்டியன் யார்? என்பன தெளிவாகத் தெரியவில்லை. எதிர்த்துத் தாக்கிய சேர அரசன் பெயர் மட்டும் பெருஞ்சேரலாதன் என்பது தெரிகிறது. போரின் முடிவு கரிகாலனுக்கு வெற்றியாய் முடிந்தது. அவனை எதிர்த்த சேரனும் பாண்டியனும் போரில் மாண்டனர். வேளிருள் பலரும் மாண்டிருக்கலாம். சேர அரசன் பெருஞ்சேரலாதன் முதுகில் புண்பட்டதையும், அதனால் அவன் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்ததையும். அதன் விளைவுகளையும் அவனது வரலாற்றில் கண்டோம். பட்டினப்பாலை, கரிகாலனால் வெல்லப்பட்டவர்கள் என்று ஏழு பேரைக் குறிப்பிடுகிறது. அவர்களுள் சிலரோ, அவர்களுள் அனைவருமோ இந்தப் போரில் ஈடுபட்டிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. இவர்கள் இவன் நடத்திய வாகைப் பறந்தலைப் போரில் எதிர்த்துப் போராடியிருக்கவும் கூடும்; அல்லாமல் தனித்துப் போராடியிருக்கவும் கூடும். வாகைப் பறந்தலைப் போர்25 வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் ஒன்பது மன்னர் கரிகாலனை எதிர்த்துப் போரிட்டனர். அந்தப் போர் கரிகாலன் தன் குதிரைப் படையைக்கொண்டு பகைவர் நாட்டைத் தாக்கிய போர். அந்தப் போரில் கரிகாலன் தானே போர்க்களத்தில் இறங்கிப் போரிட்டான். ஒன்பது மன்னர்களில் யாராலும் அவனை எதிர்த்து நிற்கமுடிவில்லை. அவர்கள் அனைவரும் தம் வெண்கொற்றக் குடைகளைப் போர்க்களத்திலேயே போட்டு விட்டு ஓடிவிட்டனர். கரிகாலன் வெற்றிபெற்றான்.
25. அகம். 125 : 19 |