பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்343

பிற போர்கள்

பட்டினப்பாலை, கரிகாலனது வெற்றிப் புகழைப் பாடுங்கால் அவனுக்கு அடங்கியவர் என்று கொள்ளும் வகையில் இரண்டு அரசர்களையும் ஐந்து இனக்குழுத் தலைவர்களையும் குறிப்பிடுகிறது.

ஒளிநாட்டு மக்கள் ஒளியர் எனப்பட்டனர். அவர்களுள் பலர் இவனது பேராற்றலைக் கேள்விப்பட்டோ, இவனோடு போராடித் தோற்றோ கரிகாலனைப் பணிந்து ஒடுங்கிக் கிடந்தனர்.26

அருவா நாட்டு மக்கள் அருவாளர். இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள். அவர்களும் ஒளியர் போன்ற நிலையின ராய்க் கரிகாலன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் ஏவலராய் மாறினர்.27

சங்ககாலத்தில் தமிழ்மொழி பேசப்பட்ட எல்லைக்கு வடபால் வாழ்ந்தவர் வடவர். அவர்கள் இவனது தாக்குதலால் வாட்ட மடைந்திருந்தார்கள்.28

குட நாட்டு மக்கள் குடவர் எனப்பட்டனர்; கரிகாலனது வெற்றிகளை எண்ணி எண்ணம் சோர்ந்து கிடந்தனர்.29

பொதுவர் என்னும் இனக்குழுவினர் சங்ககாலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இன்னார் என்பது தெரியவில்லை. எனினும், பொதியமலைப் பகுதியில் வாழ்ந்த மக்கள் பொதுவர் எனப் பட்டனர் எனலாம். அவர்களின் கால்வழியை அழியும்படி கரிகாலன் அவர்களை வென்றான்.30

இருங்கோவேள் கரிகாலனை எதிர்த்துப் போராடி மாண்ட அரசன்.31

பாண்டியநாட்டு அரசன் தென்னவன் என்று சுட்டப்படுகிறான் கரிகாலன் சீற்றம் கொண்டு தென்னவனின் கோட்டைகளைத் தாக்கி அழித்தான்; இதனால் தென்னவன் அரசாளும் ஆற்றலை இழந்தான்.32


26. பட்டினப். 274

27. ௸ 275

28. ௸ 276 29. ௸ 276

30. ௸ 281

31. பட்டினப். 282

32. ௸ 277