344 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
கரிகாலனது போர்ச் செயலைப்பற்றிச் சில பாடல்கள் பொது வகையில் குறிப்பிடுகின்றன. கரிகாலன் அரியணையேறியதும், பகைவர் கோட்டைகளைத் தாக்கி அழிக்கும் உழிஞைப் போர் நடத்திப் பகைவர் படைகளை அழித்தான்.33 இவன் பகைவர்களது வளப்பம்மிக்க நாடுகளைப் பாழாகும்படி அழித்தான்;34 பகைவர் ஊர்களைத் தீயிட்டுக் கொளுத்தினான்.35 இலங்கைப் போர் ‘இராசாவளி’ என்பது இலங்கையின் வரலாற்றைக் கூறும் பிற்கால நூலாகும். இந்த நூலில் கரிகாலனது செயலைப்பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. கரிகாலன் இலங்கையின்மீது படை யெடுத்துச் சென்று 12 ஆயிரம் இலங்கை மக்களைச் சிறை செய்து தன் நாட்டுக்குக் கொண்டு வந்தானாம். அவர்களைக் கொண்டு தன்னாட்டில் பாயும் காவிரி ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரைகள் அமைத்தானாம். இவ்வாறு கூறும் அந்த வரலாறு மேலும் சிலவற்றைக் கூறுகிறது. முதலாம் கயவாகு என்னும் இலங்கை அரசன் சோழநாட்டுக்கு வந்து தன்னாட்டுக் கைதிகளை மீட்டுக் கொண்டு சென்றதோடு தமிழ்நாட்டி லிருந்து மேலும் 12 ஆயிரம் பேர்களைக் கைதுசெய்து தன்னாட்டுக்கு அழைத்துச் சென்றானாம். இவ்வாறு கூறப்படும் வரலாறுகளில் வரும் கைதிகளின் எண்ணிக்கை உயர்வுநவிற்சியாக இருக்கக் கூடும். ஆனால், நிகழ்ச்சியில் ஓரளவேனும் உண்மை இருக்கத்தான் செய்யும். கரிகாலனின் முன்னோன் கடலில் பருவக்காற்றின் துணை கொண்டு கப்பல் ஓட்டிச் சென்றான் என்பதை முன்பே கண்டோம். அவனது வழிவந்த இவனிடம் கடற்படை இருந்தது என்பது பொய்யாகாது. இந்தக் கடற்படையின் துணைகொண்டு இவன் இலங்கை நாட்டைத் தாக்கி வென்று கைதிகளைப் பிடித்து வந்திருக் கலாம். நெடுஞ்சேரலாதன் கடற்போரில் ஈடுபட்டுத் தன் நாட்டை அடுத்திருந்த தீவுகளை வெற்றிபெற்றது போலக் கரிகாலன் தன் நாட்டை அடுத்திருந்த இலங்கையைத் தாக்கி வெற்றி பெற்ற போர் இது
33. ௸ 235 - 239; புறம். 224 : 1 34. பட்டினப். 240 - 245 35. புறம். 7 : 7 - 8 |