பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 347 |
கட்டியுள்ளான். அந்த அணையின் அடித்தளத் தொடக்கப் பணிக ளேனும் கரிகாலன் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று எண்ண இடமுண்டு. களவேள்வி41 தன்னுடைய வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் இவன் களவேள்விகள் செய்தான். இதனைக் கருங்குழலாதனார் எனும் புலவர் பாராட்டியுள்ளார். இதனால் வைதிக சமயத்தவர் பெற்றிருந்த செல்வாக்குப் புலனாகிறது. வாணிகம்42 புகார் நகரத்தில், கரிகாலன் காலத்தில் கடல் வாணிகமும் தரை வாணிகமும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த வாணிகம் அரசின் மேற் பார்வையில் நடந்தது என்பதை வாணிகப் பொருள் மூட்டைகளின்மீது, புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது என்று கூறப்படுவதிலிருந்து அறியலாம். அன்றியும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் புலிச்சின்னம் பொறிக்கப் பட்ட கதவுகளையுடைய காப்பகத்தில் வைக்கப் பட்டிருந்தன. அந்தக் காப்பகத்தில் இடம் இல்லாமல் வெளியில் குவிக்கப்பட்டிருந்த பொருள்களுக்கும் அரசனின் காப்பு அமைக்கப் பட்டிருந்தது. உயர்ந்த குதிரைகள், அரபிக் கடல் வாணிகத்தின் வழியே வந்திறங்கின. ஈழநாட்டு (இலங்கை) உணவுப் பொருள்களும் காழக நாட்டுச் (பர்மா) செல்வமும் (தேக்கு) வங்காள விரிகுடா வழியே நடத்திய வாணிகத்தால் வந்து இறங்கியவை. மிளகு மூட்டைகள் சேரநாட்டுப் பகுதியிலிருந்து தரைவழியே வந்து இறங்கின. வடமலையில் கிடைத்த மணி, பொன் ஆகியனவும், குடமலையில் கிடைத்த சந்தனம், அகில் ஆகியனவும், கங்கையாற்றுப் பகுதியில் கிடைத்த வளப்பம் நிறைந்த பொருள்களும் தரைவழியாக வும் கடல்வழியாகவும் இங்கு இறக்குமதி செய்யப்பட்டன. தென் கடலில் தோன்றிய முத்துகளும் குணகடலில் தோன்றிய பவளமும் தோன்றிய இடத்திலிருந்து நேரே கொண்டு வரப்பட்டன. வெளிநாடு களுக்குச் செல்லும்போது ஏற்றுமதி செய்வதற்காகக் காவிரி ஆற்றுப்
41. புறம். 224 : 9 42. பட்டினப். 119 - 137, 184 - 193 |