348 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
பகுதியில் கிடைத்த சிறப்புமிக்க பொருள்கள் (கரும்பு, வெல்லம், இஞ்சி, மஞ்சள் முதலானவை)அங்குக் கொண்டு வந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் நாம் எண்ணும்போது கரிகாலன் வேளாண்மை வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருந்தது போலவே. வாணிக மேம்பாட்டிலும் கண்ணும் கருத்துமாய் இருந்தான் என்பதை அறியமுடிகிறது. புதுப்புனல் விழா43 தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆங்காங்கே சிறப்புமிக்க திருவிழாக்கள் நடந்தன. புகார் நகரத்தில் நடைபெற்ற கடல் நீராடுவிழா, இந்திர விழா என்னும் பெயரைப் பெற்றிருந்தது. உறையூரில் நடைபெற்ற குளநீராடு விழா, ‘பங்குனி முயக்கம்’ எனப் பெயர் பெற்றிருந்தது. கழார் நகரின் காவிரித் துறையில் நடைபெற்ற விழா, புதுப்புனல் விழா.44 இந்த விழாவில் அரசனும் கலந்து கொள்ளுவது வழக்கம். ஆட்டன் அத்தி இந்த விளையாட்டில் சிறப்புற்று விளங்கியதை அவனது வரலாற்றில் காணலாம். இந்த ஆற்றுநீர்த் திருவிழாவுக்குக் கரிகாலன். தன் சுற்றத்தாருடன் வந்திருந்தான் என்று கூறப்படுவதால், அரசன் என்ற நிலையில் மட்டுமன்றிச் சோழநாட்டுக் குடிமகன் என்ற முறையிலும் இவன் கலந்து கொண்டான் போலும். இந்த விழாவில் கரிகாலன் கலந்து கொண்டு சிறப்பித்த செய்தி சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது45 அரசிளங்குமரர், அரசனின் உரிமைச் சுற்றம். பரதவ குமரர் (கடல் வாணிகர்). பல்வேறு ஆயத்தார், ஆடும் பெண்கள், பாடும் பெண்கள் முதலானோர் கரிகாலனோடு விழாவில் கலந்து கொண்ட செய்தியை அது கூறுகின்றது.
43. அகம். 376 : 3 - 10 44. இதனைச் சேர நாட்டில் ‘ஆறாட்டு’ என்பர். 45. சிலப். 6 : 155 - 160 |