பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 375 |
பொறையுடன் போர் செய்தான். போர் செய்ய வேண்டிய காரணம் தெரியவில்லை. இவனை எதிர்த்துச் செங்கணான் போர் செய்தான். அந்தப் போர் ‘போர்’ என்னும் ஊரில் நடந்தது. (போர் என்னும் ஊருக்குப் போர்வை என்னும் பெயரும் இருந்தது.) இந்தப் போரில் கணைக்கால் இரும்பொறை தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் செங்கணானால் சிறைப் பிடிக்கப்பட்டான். சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறையைச் சோழன் செங்கணான் குடந்தைக் (கும்பகோணம்) கோட்டையில் மேற்கு வாயில்புறத்தில் இருந்த குடவாயில் சிறைக்கோட்டத்தில் அடைத்து வைத்தான். சிறையில் இருந்த கணைக்கால் இரும்பொறை நீர்வேட்கை கொண்டு நீர் கேட்டான். சிறைக்கோட்ட ஊழியர் அலட்சியமாக இருந்து நெடுநேரஞ்சென்று நீர் கொண்டுவந்து கொடுத்தனர். அவன் நீரைப் பருகாமலே ஒரு செய்யுளைப் பாடினான். இச் செய்யுளின் அடிக் குறிப்பு இவ்வாறு கூறுகிறது. ‘சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப் போர்ப்புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.’ ‘பிறந்த குழந்தை இறந்தாலும், பிறக்கும் முன்பே குழந்தை இறந்து பிறந்தாலும் அக் குழந்தை வீர ஆள் ஆகவில்லை என்று கருதி அதனை வீர ஆளாக மடியச் செய்வாராய் அதன் உடலில் வாளால் காயப்படுத்திப் புதைப்பதோ எரிப்பதோ செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது. நானோ வீரர்களுக்குத் தலைவனான அரசனாக விளங்கியும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வேட்டைநாய் போல் சிறையில் அடைப்பட்டுள்ளேன். பகைவர் கூட்டத்தில் உள்ள நண்பரல்லாத ஒருவர் அளித்த நீரை மான உணர்வின்றி எனது நீர் வேட்கையைத் தணிக்கும் பொருட்டுக் கெஞ்சிக் கேட்டுப் பருகுதலை இவ்வுலகத்திலுளள யாரேனும் விரும்புவரோ? விரும்பார்2 (எனவே நானும் விரும்பேன்).’ இந்தக் கருத்தமைந்த பாடலைப் பாடிவிட்டுத் தண்ணீர் பருகாமல் நாச்சுருண்டு சோர்ந்து கணைக்கால் இரும்பொறை சோழனது சிறையில் மாண்டு போனான்.
2. புறம். 74 : 4 - 7 |