பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 381 |
இறந்த செய்தியை நெடுமுடிக்கிள்ளி கேள்விப்பட்டான்; வருந்தினான். தன் மகன் இறந்தானே என்பது அவன் வருத்தம் அன்று. பிழை செய்தவனைத் தன் கையால் கொல்ல வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்பதுதான் அவனது வருத்தம். இவனது முன்னோனான சோழ அரசன் ஒருவன் (மனுநீதிச் சோழன்) தன் மகனைத் தானே கொன்று தண்டனையை நிறைவேற்றி னான். (துள்ளி விளையாடிய கன்றுக்குட்டி தவறிக் தேர்க்காலில் சிக்கி இறந்தது) தேரைச் செலுத்திச் சென்றவன் சோழ அரசன் மனுவின் மகன். தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடித்தபோது வந்து பார்த்து, நிலைமையை அறிந்த அரசன் தன் ஒரே மகனை அதே இடத்தில் கீழே கிடத்தி, அவன்மேல் தன் தேரை ஏற்றிக் கொன்று தாய்ப் பசுவுக்கு நீதி வழங்கினான். இந்த நிகழ்ச்சியை நெடுமுடிக்கிள்ளி நினைத்தான். தன் மகனைத் தன் கையால் கொன்று நீதி வழங்கும் வாய்ப்பு இல்லையே என்று வருந்தினான். இந்த நிகழ்ச்சிபற்றிய செய்தி பிற வேந்தர்களின் காதுகளில் படுவதன் முன்னர்த் தன் மகனது உடலைத் தன் கண்ணில் படாமல் எரித்து விடும்படி ஆணையிட்டான். இவனது இந்தச் செங்கோன்மையை எண்ணும்போது தமிழர் உள்ளம் பெருமிதம் கொள்கிறது. மற்றும் இந்த அரசன் தன் மகன் கொல்லப்படக் காரணமாயிருந்த அந்தப் பெண்ணையும் கைதுசெய்து காவலில் வைக்குமாறு கூறினான். இவன் இவ்வாறு செய்ததிலும் தவறு இல்லை. அவன் அந்தப் பெண்ணைக் ‘கணிகையின் மகள்’ (விலைமாதர் மகள்) என்றே எண்ணியிருந்தான். இவளது வலையில்பட்டு இன்னும் பலர் தன் நாட்டில் அவலநிலை எய்தக்கூடும் என்று கருதினான். நாட்டு மக்களின் நலனுக்காகவே அவளைச் சிறையில் அடைக்கச் செய்தான். மணிமேகலை சிறையில் அடைக்கப்பட்டாள். நெடுமுடிக்கிள்ளியின் மனைவி இராசமாதேவி செய்தியை அறிந்து மகனைப் பிரிந்த துன்பத்தால் மணிமேகலைக்குப் பல துன்பங்கள் செய்தாள். மணிமேகலை அத் துன்பங்களைக் களைந்து நலமுடன் இருந்தது கண்டு அரசி அவளிடம் மன்னிப்பு வேண்டினாள். |