382 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
மேலே கூறப்பட்ட அரசமாதேவியின் பெயர் சீர்த்தி. அவள் திருமாலுக்கு மூன்றடி மண் வழங்கி மாண்ட ‘மாவலி’ அரச பரம்பரையில் தோன்றிய ஒருவனின் மகள்.2 நெடுமுடிக்கிள்ளி ‘புன்னையங்கானல்’ மணல்வெளியிலே உலாவிக் கொண்டிருந்தான். அங்கே தனித்து நின்ற ஓர் அழகியைக் கண்டான். பால் உணர்வுகள் அவர்களைக் கூட்டிவைத்தன. ஒரு மாதம் அவளுக்கும் அவனுக்கும் அவ்விடத்தில் களவு ஒழுக்கம் நடை பெற்றது. ஒரு மாதத்திற்குப் பின் அவளை அவ்விடத்தில் காண முடியாமல் ஏங்கினான். அங்கே வந்த சாரணர் அவள் நாகநாட்டு இளவரசியாய் இருக்கக்கூடும் என்றனர். நாகநாட்டு அரசன் வளை வணன். அவனது மனைவி வாசமயிலை. இவர்கள் இருவருக்கும் பிறந்தவள் பீலிவளை.3 இவள் பிறந்தபோது ‘இவள் வயது வந்தபின் கதிர்க் குலத்தவன் ஒருவனைக் களவில் கூடிக் கருவுற்ற நிலையில் திரும்பி வருவாள்’ என்று கணியர்கள் கணித்துக் கூறினர். இந்தச் செய்தி சாரணர்க்குத் தெரியும். அரசன் கூறிய கூற்றைச் சாரணர் கேட்டனர். சோழ அரசன் சூரிய குலத்தினன் எனவே, பீலிவளையைத்தான் அரசன் அடைந்து மகிழ்ந்திருக்க முடியும் எனக் கூறினர். (கருவுற்றுச் சென்ற பீலிவளை தான் கருவுற்ற நிலையை உணர்ந்தாள். உயிருடன் தன் தந்தை தாயாருக்குச் சுமையாக வாழ விரும்பவில்லை. எனினும், வயிற்றில் உள்ள குழந்தைக்காக வாழ்ந்தாள். குழந்தை பிறந்தது; ஆண் குழந்தை. அங்கு வந்த வாணிகர் கண்களில் படும்படி குழந்தையைக் கிடத்தி விட்டுச் சென்றுவிட்டாள். வாணிகர்கள், யாரும் இல்லாமல் கிடந்த குழந்தையைக் கண்டு எடுத்துவந்து சோழநாட்டில் சேர்ப்பித்தனர். தாய் மாண்டாள்; குழந்தை தன் தந்தை நாட்டுக்கே வந்துவிட்து.)4 வஞ்சி வெற்றி நெடுமுடிக்கிள்ளி நாட்டுப் பரப்பை விரிவுபடுத்தக் கருதினான். இதனால் இவன் வஞ்சி நகரைத் தாக்கினான். வெற்றி பெற்றான்.
2. மணிமே. 19 : 54 - 55 3. மணிமே. 24 : 54 - 60 4. அடைப்புக் குறிப்பில் உள்ள கதைப் பகுதி செவிவழிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டது. வரலாற்று உண்மையன்று. |