பக்கம் எண் :

384மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

இவன் கைகளிலெல்லாம் மலர் மாலைகளை அணிந்து கொண்டான். இவன் களிற்றின்மேல் ஏறிப் போருக்கெழும் கோலம் அன்றைய மக்கள் உள்ளத்தைக் கவர்ந்திருந்தது.12

இசைவெங்கிள்ளி என்பதற்கு இசைத் தமிழில் வேட்கையுடைய கிள்ளி என்றோ, புகழ்மீது வேட்கையுடைய கிள்ளி என்றோ பொருள் கொள்ளலாம்.

கைவண் கிள்ளி

கரிகாலன் பெரும்போரில் ஈடுபட்ட ஊர் வெண்ணி என்பதை அறிவோம். இந்த வெண்ணியினைத் தலைநகராகக் கொண்டு ஒரு சமயம் ‘கைவண் கிள்ளி’13 என்பவன் ஆண்டுவந்தான்.

சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் ‘கைவண் தோன்றல்’14 என்று குறிப்பிடப்படுகிறான். இந்தக் கைவண்மை குதிரை பூட்டிய தேரை ஓட்டுவதில் இவன் பெற்றிருந்த திறமையைக் குறிக்கிறது. இதனோடு மேற்கூறிய கைவண் கிள்ளிக்கு எந்த அளவு தொடர்பு உண்டு என்பது தெரியவில்லை.

பொலம்பூண் கிள்ளி15

பொலம்பூண் கிள்ளி என்று குறிப்பிடப்படும் இவன் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்துகொண்டு காவிரி ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள நாட்டை ஆண்டுவந்தான்.

இவன் கோசர்களின் படையை அழித்தான். அன்றியும், அவர்களது நாட்டையும் கைப்பற்ற முயன்றான்.

கடுமான் கிள்ளி

‘கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி’ என்று குறிப்பிடப்படும். இந்த அரசன் தன் யானையைக் கொண்டு பகைவர் மதில்களைத் தாக்கி அழித்தான் என்று தெரிகிறது.


12. சல்லியங்குமரனார். நற். 141

13. நற். 390 : 3

14. புறம். 43 : 12

15. அகம். 205 : 10