பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 385 |
வாள்பட்ட புண் ஆறி வடுப்பட்ட மேனியுடன் விளங்கிய ஏனாதிப் பட்டம் பெற்ற திருக்கிள்ளி என்னும் படைத்தலைவன் ‘கடுமான் கிள்ளி’ என்று குறிப்பிடப்படுகிறான்.16 சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் என்பவன் ‘கடுமான் தோன்றல்’17 என்று குறிப்பிடப்படுகிறான். மேலே கூறப்பட்ட கடுமான் தோன்றல் அடுத்துக் கண்ட இருவருள் ஒருவனாகவோ, தனியொருவனாகவோ இருக்கலாம். மணக்கிள்ளி ‘சோழன் மணக்கிள்ளி’ என்னும் பெயரைப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியர் குறிப்பிடுகிறார். ‘நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்’18 செங்குட்டுவன் என்று அது குறிப்பிடுமிடத்தில் இப் பெயர் பெண்ணின் பெயராக அமைந்திருப்பதைக் காண்கிறோம். மணக்கிள்ளி என்னும் சோழ அரசனின் மகனது பெயரும் மணக்கிள்ளி என்றே வழங்கப்பட்டிருக்கலாம். ‘செங்குட்டுவனின் தாய்ப்பாட்டான்’ஞாயிற்றுச் சோழன்’ என்றும் குறிப்பிடப்படுகிறான்.19 இங்கும் செங்குட்டுவனது தாயின் பெயர் காணப்படவில்லை. (ஆனால் இந்தப் பகுதிக்கு உரை கூறுகையில் அடியார்க்குநல்லார் ஞாயிற்றுச் சோழனை நெடுந்தேர்ச் சோழன் என்று சிறப்பித்துக் கூறி அவனது மகளுக்கு ‘நற்சோணை’ என்னும் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.) பிற சோழ அரசர்கள் - 2 சோழர் குடியினர் ஒன்பது இடங்களில் செல்வாக்குடன் தனித்தனிக் குடியினராய் விளங்கினர். அவர்களுள் புகார், உறையூர், கழார் ஆகிய ஊர்களில் இருந்துகொண்டு அரசாண்ட சோழ அரசர்கள் வரலாற்றை இதுவரைகண்டோம்.
16. புறம். 167 : 10 17. ௸ 43 : 11 - 12 18. பதிற். பதி. 5 : 2 - 3 19. சிலப். 29 : உரைப்பாட்டுமடை |