பக்கம் எண் :

386மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

பிற இடங்களில் (ஆர்க்காடு, வல்லம் ஆகிய இடங்களில்) இருந்து கொண்டு அரசாண்ட சோழ அரசர்களின் பெயர்கள் தெரிய வருகின்றன.

ஆர்க்காட்டுச் சோழர்1

நாடு

ஆர்க்காடு நீர்வளம் மிக்க ஊர். நெல்வயல் நீரில், நெய்தல் பூவிலுள்ள தேன் கலந்து பாயும்.2 இந்த ஆர்க்காட்டைச் சூழ்ந்திருந்த பகுதியை நாம் ஆர்க்காட்டு நாடு என்று குறிப்பிட்டுக் கொள்வோம். இந்த ஆர்க்காட்டு நாட்டில் வாழ்ந்த குடியினருள் ஒருவர் இளையர். இந்த இளையர் குடியினர் அலையலையாக வரும் வெள்ளம்போல் அணியணியாகச் சென்று வேட்டையாடுவார்கள். அவர்கள் வேட்டை யாடிப் பெற்ற பொருள்களில் குறிப்பிடத்தக்கது யானைக்கோடு.3 இந்த இளையர் குடியினர் வாள் வீரர்களாய் விளங்கினர்.4 இவர்களின் பெருமகனாய் (தலைவனாய்) அழிசி என்பவன் விளங்கினான்.

ஆர்க்காட்டு நாட்டில் இருந்த காடு இந்த அரசன் அழிசியின் பெயராலேயே’அழிசியம் பெருங்காடு’ என வழங்கப்பட்டது.5 இந்தக் காட்டு நெல்லிக்கனிகள் சிறப்புப் பெற்றவை.

நீர்வளம், நெல்லைமரக் காடு, சோழர் குடியினர் ஆட்சி ஆகிய வற்றை எண்ணும்போது இந்த ஆர்க்காடு தஞ்சை மாவட்டத்தில் உள்ளதாக இடைக்காலக் கல்வெட்டுகள் குறிப்பிடும் ஆர்க்காட்டுக் கூற்றமோ என்று எண்ண வேண்டியுள்ளது.

இந்த ஆர்க்காட்டைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட அரசர்களுள் மூன்று பேரைப் பாட்டன் - தந்தை - மகன் என்னும் உறவு முறையில் நாம் காணமுடிகிறது. அவர்கள் இவர்கள்:


1. புறம். 71 : 13; நற். 87 : 3, 190 : 4, குறுந். 258 : 7

2. நற். 190 : 6; சிலப். 29 : உரைப்பாட்டு மடை

3. ‘அரியல்அம் புகவின் அம்தோடு’ குறுந். 258 : 5 புகா - உணவு, அரி - அரிசி. அரி அல்லாத அழகிய புகா - யானை. எனவே, கொல்லிமலை மக்கள் யானைக் கோட்டை விற்று வாழ்ந்த நிலையை ஓரி வரலாற்றில் கண்டு ஒப்புநோக்கலாம்.

4. குறுந். 258 : 6

5. நற். 87 : 3 6. புறம். 71 : 13