பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 387 |
ஆதன் அழிசி சேந்தன் ஆதன்6 ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் தன் அரசவையில் நட்புரிமையுடன் விளங்கிய ஐந்து பேரைக் குறிப்பிடுகையில் ஆதன் அழிசி என்னும் ஒருவனைக் குறிப்பிடுகிறான். இந்த அழிசி பிற புலவர்களால் குறிப்பிடப்படும் ஆர்க்காட்டு அரசன் அழிசியே என்று கொள்வதில் தவறில்லை. ஆயின், அந்த அழிசியின் தந்தை பெயர் ஆதன் என்பது பெறப்படுகிறது. இவனைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. அழிசி மேலே குறிப்பிட்டபடி இவன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனுடைய நண்பனாக விளங்கினான். இதனால் இவன் சோழப் பேரரசின் தலைமை இடத்தோடு முரண்பட்டிருந்தானோ என்று எண்ண வேண்டியுள்ளது. பேரரசர்கள் பகையரசனின் சிற்றரசர்களைத் தம்வயப்படுத்திக் கொள்வது உண்டு. அந்த வகையில் இந்த அழிசி பாண்டியனின் நண்பனாய் விளங்கியிருக்கலாம். இவன் காவிரி ஆற்றங்கரையிலுள்ள மருதமரத்தில் கட்டி வைக்கப்பட்டான் என்றும், இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது என்றும் கூறப்படுகிறது7 இவன் பாண்டியனோடு சேர்ந்து கொண்டதால் சோழர்க்கு எதிராகப் படையெடுத்தான் என்று கருதிச் சோழப் பேரரசன் இவனை இவ்வாறு பலரும் நீராடும் நீர்த்துறையில் கட்டிவைத்து இழிவுபடுத்தியிருக்க கூடும் என்று எண்ண இடமுண்டு. அழிசி, ‘வெல்போர்ச் சோழர்’ குடியில் தோன்றியவன்;8 இளையர் குடியினரிடையே தலைமையாக விளங்கியவன்,9 மலர்மாலை அணிந்து கொண்டு இவன் தேரில் உலாவருதல் கண் கொள்ளாக் காட்சி10 ஆகும்.
7. குறுந். 258 : 2 - 3 8. நற். 87 : 3 9. குறுந். 258 : 6 10. நற். 190 : 4 |