388 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
சேந்தன் அழிசி பாண்டியனின் நண்பனாக விளங்கினான் என்று கூறுவதைத் தவிர அவனது சிறப்புமிக்க அரசியல் தொடர்பான செயல்கள் வேறு ஒன்றும் இல்லை. அன்றியும் இவனது பெயரும் புகழும் அக்காலத்திலேயே பிற நாடுகளில் அவ்வளவாகப் பரவவில்லை. (எனினும், அவன் நாட்டுமக்கள் ஆர்க்காட்டையே அழிசியம் பெருங்காடு’ என்று குறிப்பிடும் அளவுக்கு அவனைப் பெரிதும் போற்றி மதித்தனர்.) எனவே, அயல்நாட்டு மக்களுக்கும் புலப்படும்படி இவனை அறிமுகப்படுத்தும் புலவர்கள் இவன் மகன் சேந்தனைக்கொண்டு அறிமுகப்படுத்துவராயினர். அவர்கள் ‘சேந்தன் தந்தை அழிசி’ என்றே தெளிவாகக் குறிப்பிடுகின்றனர்.11 போர் சேந்தன் அரிய கோட்டையைத் தாக்கி வென்றான் என்று கூறப்படுகிறது. அந்தப் போரின்போது அவன் வேலில் படிந்த புள்ளி புள்ளியான குருதிக் கறையைத் துடைக்காமல் வெற்றிச் சின்னமாக அப்படியே வைத்துக் கொண்டு தோற்றமளித்த நிலைமையைப் புலவர் வியந்து குறிப்பிட்டுள்ளார்.12 இவன் ‘ஏந்து கோட்டு யானைச் சேந்தன்’ என்று சிறப்பிக்கப் பட்டுள்ளான். இதனால், இவன் யானைமீது ஏறிக் காட்சி தந்த நிகழ்ச்சிகள் பல எனலாம். இவன் தந்தை தேரில் ஏறிக் காட்சி தந்ததை இவ்விடத்தில் ஒப்புநோக்கலாம். யானை வேட்டையாடுவதில் வல்ல இளையர் குடியினர்க்கு இவன் தந்தை, தலைவனாக விளங்கியதற்கும், இவன் யானைமீது தோன்றியதற்கும் தொடர்பு இருப்பதைக் காணலாம். இந்தச் சேந்தன் சோழப் பேரரசனுக்குத் துணைவனாய் விளங்கினான் என்று கொள்ளலாம். இதனால், இவன் தந்தை இவனைக் கொண்டு அறிமுகப்படுத்தப்படுகிறான் என்றே கொள்ளலாம். படை எடுத்த கொடியவனை நேரடியே அறிமுகப்படுத்த விரும்பாத புலவர், அவனது மகன் நல்லவனைக் கொண்டு அறிமுகப்படுத்துகிறார் என்று எண்ணுவது பொருத்தமே.
11. ௸ 190 : 3-4; குறுந். 258 : 4 - 7 12. நற். 190 : 1-2 |