பக்கம் எண் :

390மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

திருக்குட்டுவன் வரலாறு சேரர் வரலாற்றுப் பகுதியில் உள்ளது. எஞ்சியுள்ள ஏனாதி திருக்கிள்ளி வரலாறும் கிள்ளி அரசர் வரிசையில் உள்ளது. தொகுத்துக் காட்டும் முறையில் இவர்களை இங்குக் குறிப்பிட்டோம்.

சோழ வேந்தரின் கால அடைவு

சங்ககாலச் சோழ வேந்தரின் வரலாற்றை வரைவதற்குச் சங்க இலக்கியப் பாடல்களே பேருதவியாக உள்ளன. ஆனால், அவற்றில் ஒரு குறையுண்டு. அரசர்களின் ஆட்சிக் காலத்தைப் பற்றியோ, எந்த ஆண்டில் யார் ஆட்சிக்கு வந்தனர் என்பதைப் பற்றியோ அவை யாதும் கூறுவது இல்லை. காலவரன்முறை, வரலாற்றின் கண்ணாகப் போற்றப்படுகிறது. காலத்தை வரையறுக்க நமக்கு அகச்சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும், அப் பாடல்களில் காணப்படும் சிற்சில குறிப்புகளையும், அம் மன்னர்களைப் பாடிய புலவர்களைச் சில தலைமுறையினராக வகைப்படுத்துவதற்குரிய செய்திகளையும், புறச்சான்றுகள் சிலவற்றையும் கொண்டு, சங்ககாலச் சோழ வேந்தர்களை ஒருவகையாகக் ‘காலத்தால் முற்பட்டவர் - பிற்பட்டவர் யாவர்’ என்பதைத் துணிந்து, அம்முறையில் அவர்களுடைய வரலாற்றை வரைந்துள்ளோம்.

இனி, அவர்களுடைய ஆட்சிக் காலத்தைக் கணிக்கும் முயற்சியில் ஈடுபடலாம். அசோகனின் கல்வெட்டுகளால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சோழ வேந்தர் தமிழகத்தில் ஆட்சி புரிந்தனர் என்பதை நாம் முன்னரே கண்டோம்.

பண்டைத் தமிழகத்து வேந்தருள் காலத்தால் மிகவும் முற்பட்ட வனாகக் கரிகாலன் காட்சி அளிக்கிறான். அவனைப் பற்றிப் பல வரலாற்றுச் செய்திகளை அறிய முடிகிறது. அவனை வெண்ணிக் குயத்தியார்,1 கருங்குழலாதனார்,2 குடவாயில் கீரத்தனார்,3 கழாஅத் தலையார்,4 பரணர்5 போன்ற புலவர்கள் பாடியுள்ளனர். கரிகாலன் காலத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் எனும் சேர அரசன் சிறப்புற்று விளங்கினான்.6 கழாஅத்தலையார் என்னும் புலவர் அவனைச் சுட்டுகிறார்.7


1. புறம். 66 2. ௸ 7, 224

3. அகம். 44 : 13 - 14

4. புறம், 65, 202 : 12

5. அகம். 326 : 5

6. புறம். 65

7. ௸