பக்கம் எண் :

392மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

ஏறியுள்ளான். எனவே, பெருஞ்சேரலாதன் இறந்தது கி. பி. 7 ஆம் ஆண்டு எனத் துணியலாம்.

கரிகாலன் சேரனோடு நடத்திய போர் வெண்ணிப்போர் என்பதாகும்.10 அஃது அவனுடைய கன்னிப் போராகும். எனவே, கி. பி. 7 ஆம் ஆண்டிற்குச் சற்று முன்பே கரிகாலன் ஆட்சிக்கு வந்திருத்தல் கூடும். கரிகாலன் கி. பி. 6 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததாகக் கொள்ளலாம். ஓர் அரசனுடைய ஆட்சிக் காலத்தை 25 ஆண்டுகள் கொண்டதாகக் கொள்ளுவது ஆராய்ச்சியாளர் வழக்கம். இவ்வடிப்படையில் கரிகாலன் கி. பி. ஆறாம் ஆண்டு முதல் கி. பி முப்பதாம் ஆண்டுவரையில் ஆட்சி செய்ததாகக் கொள்ளலாம்.

இந்தக் காலத்தை மையமாகக் கொண்டால், கரிகாலனுக்கு முற்பட்ட பெருநற்கிள்ளி, சேட்சென்னி அரசர்களும், கோப்பெருஞ் சோழனும் கி. மு. முதல் இருநூற்றாண்டுகளில் ஆட்சி செய்தவர்களாகத் தோன்றுவர்.

கரிகாலனுக்குப் பிறகு நலங்கிள்ளி ஆட்சிக்கு வந்ததாகத் தெரிகிறது. அவன் கி. பி. 30 - 55 வரை ஆட்சி செய்ததாகக் கொள்ளலாம். அவனுடைய மகன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கி. பி. 56 முதல் கி. பி. 80 வரை ஆட்சி புரிந்திருக்கக்கூடும். இவனுடைய காலத்தை யொட்டிக் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் ஆண்டதாகக் கண்டோம். எனவே, கி. பி. 81 முதல் கி. பி. 105 வரை இவன் ஆண்டதாகத் தெரிகிறது. இதற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று தலைமுறைச் சோழ அரசர்கள் யாவர் எனத் துணிய இயலவில்லை.

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியின் சமகாலத்தவ னாக இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காணப்படுகிறான். இவன் தலையாலங்கனாத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவனாவான். இவனுடைய சமகாலத்துப் புலவரான நக்கீரர். கிள்ளிவளவனிடத்துப் பழையன் மாறன் தோற்றோடியதைச் சுட்டுகிறார்.11 எனவே, கிள்ளிவளவனுக்குப் பிறகு தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இரண்டு தலைமுறை சோழ ராட்சியில் இடைவெளி காணப்படுவதாகக் கொண்டு கணக்கிட்டால். கி. பி. 155 முதல் 180 வரை


10. புறம். 66 : 6

11. அகம். 346 : 19 – 22