பக்கம் எண் :

396மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

மறைந்துபோயின. இப்பொழுது இலங்கை என்று வழங்கப் பெறும் நிலப்பகுதி சங்க காலத்தில் ‘ஈழம்’ எனப் பெயர் பெற்றிருந்தது.

இலங்கை தனியாகப் பிரிந்துபோன பிறகும், எஞ்சியிருந்த நிலப் பகுதிகளில் பல, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலில் முழுகிப் போயின. முழுகிப்போன பகுதிகளில் பல பாண்டியருடைய ஆட்சியில்இருந்தன. பாண்டிய அரசர்கள் அமைத்திருந்த தலைச்சங்கம். இடைச்சங்கம் என்ற இரண்டு தமிழ்ச் சங்கங்களும், கடலில் மூழ்கிப்போன நாட்டில் இருந்தன என்று பழைய செவிவழிச் செய்தி கூறுகிறது. சிலப்பதிகார மும், கலித்தொகையும், இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரமும் பாண்டிய நாட்டின் தெற்கே பரவியிருந்த நிலப்பகுதிகள் கடலில் மூழ்கிப் போனதைப்பற்றிக் கூறுகின்றன.5 இலங்கை வரலாற்றைக் கூறும் மகாவம்சமும் இச் செய்தியை வலியுறுத்துகிறது.6 அக் காலத்திலும் குமரித்துறை புண்ணிய தீர்த்தமாகக் கருதப்பட்டது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் குமரித் துறையில் இருந்து இலங்கைப் பக்கமாக கடலில் இடையிடையே பாறைக்கற்கள் காணப்பெற்றதை மணிமேகலை கூறுகிறது.7 இந்திய நாட்டு மக்கள் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பிறகு குமரித் துறையிலும் நீராடினர். பாண்டிய நாட்டிற்குத் தெற்கே இலங்கை வரையில் இருந்து பின்னர் மூழ்கிப்போன நிலம் ‘லெமூரியா’ என்றும். ‘குமரிக்கண்டம்’ என்றும் கூறப்படுகிற பழங்காலப் பெரிய நிலப் பரப்பு அன்று. இப்பொழுது இந்தியப் பெருங்கடல் என்று கூறப் பெறுகிற பெரிய நிலப்பரப்பு மிகப்பழைய காலத்தில் ஆப்பிரிக்காக் கண்டம் முதல் ஆஸ்திரேலியா வரையில் பரந்த பெரிய நிலமாக இருந்தது என்றும், அதற்கு ‘லெமூரியா’ என்னும் பெயர் வழங்கிய தென்றும், பின்னர் அக்கண்டம் மறைந்துபோய் இந்தியப் பெருங்கடல் தோன்றியதென்றும் நிலப் பொதியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மிகப் பழங்காலத்தில் இருந்த லெமூரியாக் கண்டம் வேறு; சங்க


5. ‘பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’ (சிலப். 11 : 19 - 20)

‘மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேற்சென்று மேலை நாடு இடம்படப்

புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்’ (கலி. 104 : 1 - 4)

‘அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்து கடல் கொள்ளப்பட்ட மதுரையும்

கபாடபுரமும் என்ப.’ (இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம்)

6. மகாவம்சம், 22 : 20

7. மணிமே. 5 : 37