பக்கம் எண் :

410மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

என்று குறிப்பிடப்படும் அரசனும் இவனே எனத் தெரிகிறது.7 வென்வேற் செழியன் என்னும் பெயர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பிறகு மதுரையில் அரியணை ஏறிய வெற்றிவேற் செழியன் என்னும் பெயரை நினைவுபடுத்துகிறது.8 இவன் தொடக்கத்தில் கொற்கை நகரில் இருந்து கொண்டு அரசாண்டமையால் இவன் கொற்கைக் கோமான் என்றும், மதுரையை ஆண்ட அரசன் என்றும் குறிப்பிடப் படுகிறான்.9 கொற்கையில் ஆட்சியைத் தொடங்கிய இவன் ‘கடுந்தேர்ச் செழியன்’ என்றும், ‘தென்புலங் காவலர் மருமான்’ என்றும் குறிப்பிடப் படுகிறான். மற்றொரு பாடல் ‘இயல்தேர்ச் செழியன்’, ‘நெடுந்தேர்த் தென்னவர் கோமான்’ எனவும் குறிப்பிடுகிறது.10 தேர் அடைமொழியும், தென்னர் குடித் தலைமையும் சேர்ந்து மேலே கண்ட கருத்துகளை உறுதிப் படுத்துகின்றன. மற்றும் ‘கொடித்தேர்’ என்னும் அடைமொழியாலும் சிறப்பிக்கப்படுகிறான்.11 அடுபோர், வெம்போர், மறப்போர், நெடுந்தேர், கடுந்தேர், இயல்தேர், கொடித்தேர், திண்டேர் முதலிய சொற்கள் தலையாலங்கனாத்துச் செருவென்ற பாண்டியனைக் குறிக்கின்றன எனக் கூறலாம். வெற்றிவேற் செழியன் என்பதும் இவனையே உணர்த்தியது என்றும் நினைக்கலாம்.

நாடு

தொடக்க நிலையில் இவன் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்திருந்த நிலப்பரப்பை ஆண்டு வந்தான். கொற்கையை அடுத்த கடலில் முத்து எடுக்கப்பட்டது. அந்தக் கடற்
பகுதியும் இவனாட்சிக்கு உட்பட்டிருந்தது.12 தென்னர் கோமான் என்றும், தென்புலம் காவலர் மருமான் என்றும் இவன் கூறப்படுவதால் தென் பாண்டிநாடு இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததெனத் தெரிகிறது. ஆலங்கானப்போர் இவனது இளமைப் போர் எனத் தெரிய வருவதால் அப் போருக்குப் பின்னர், இவன் தன்னாட்டின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான் எனத் தெரிகிறது.


7. ௸ 76 : 9

8. கொற்கையில் இருந்த வெற்றிவேற்செழியன். (சிலப். உரைபெறு கட்டுரை)

9. ‘கொற்கைக் கோமான்

தென்புலங் காவலர் மருமான்’ (சிறுபாண். 62 - 63)

10. அகம். 209 : 3 - 4

11. ‘இழையணி நெடுந்தேர்க் கைவண் செழியன்’ (அகம். 47 : 15)

12. ‘முத்தின் தெண்கடல் பொருநன் திண்டேர்ச் செழியன்’ (௸ 137 : 13 - 14)