பக்கம் எண் :

412மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

தொடர்ச்சியாகப் பகைவர்களைத் துரத்தியடித்து அவர்களுடைய அரண்களைத் தாக்கும் போரில் ஈடுபட்டது. கூலிப்படையின் துணையால் பகைவர் நாடுகளைச் சூறையாடியது. திங்கள் தோன்ற ஞாயிறு மறைந்ததுபோல அவர்களை வென்றது முதலான செய்திகள் கூறப் பெற்றுள்ளன. பகை மறவரின் மூதிற் பெண்கள் அழுதரற்ற வென்று, ஒரு பகலில் வெற்றிபெற்றுப் பகைவரின் முரசு, குடை முதலியவற்றைக் கைப்பற்றிக் களவேள்வி செய்த வீரச் செயல்களையும்பற்றி மேற்கூறப் பெற்ற புலவர்கள் கூறியுள்ளனர். இப் புலவர்களில், இடைக் குன்றூர் கிழார், கல்லாடனார், குடபுலவியனார், நக்கீரர், வெங்கண்ணியார், மாங்குடி மருதனார் முதலியோர் முக்கிய மானவர் ஆவர்.

ஆலங்கானப் போரில் நெடுஞ்செழியன் உழிஞைப் பூச்சூடிப் போரிட்டான் என்று கூறப்பட்டுள்ளது.20 இவ்வகைப் போர் பகைவரின் கோட்டையைத் தாக்கும் போர்முறை என்பதை நாம் அறிவோம். இதனால், நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தை முதலில் தாக்கினான் என்பதும், அத் தாக்குதலை முறியடிக்கவே ஏழு அரசர்கள் ஒன்று சேர்ந்தனர் என்பதும் தெரியவருகின்றன. அப் போரில் நெடுஞ் செழியனை எதிர்த் எழுவரில் ஐவர் குறுநில மன்னர்கள், எஞ்சிய இருவர் முடியுடை வேந்தர்கள் ஆவர். நெடுஞ்செழியனை எதிர்த்த சேரஅரசன் இன்னான் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சேரல் என்று அவனது பெயர் பொதுவகையால் சுட்டப் பெற்றுள்ளது. சேரல் என்னும் பொதுப் பெயருடன் நெடுஞ்சேரலாதன், நார்முடிச்சேரல், அந்துவஞ்சேரல், மாந்தரஞ்சேரல், பெருஞ்சேரல், இளஞ்சேரல் ஆகிய பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் ஆதன் என்னும் பின் அடையோ, இளமை, பெருமைப் பண்பை உணர்த்தும் முன் அடையோ இன்றிக் காணப்படும் அரசர்கள் நார்முடிச் சேரல், குட்டுவன்சேரல், மாந்தரஞ்சேரல் என்னும் மூவரேயாவர். இந்த மூவரில் மாந்தரஞ்சேரல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறையி லிருந்து தப்பிச் சென்றான் என்று ஒரு பாடலில் கூறப்படுவதால், மேற் கூறப்பட்ட போரில் இந்தப் பாண்டியனை எதிர்த்துத் தோற்றவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறையே என்று நாம் கருதலாம். இவன் சிறையில் இருந்து தப்பிச் சென்ற செயல், குழியில் அகப்பட்ட யானை, குழியைத் தூர்த்துக் கொண்டு தப்பிச் சென்றது


20. ௸ 76 : 5 - 9