பக்கம் எண் :

414மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

வென்று, அவர்களது முத்தூற்றுகூற்றத்தைத் தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டான்.

பல்குட்டுவரை வென்றது

சேர அரசர்களில் இளஞ்சேரல் இரும்பொறை, குட்டுவர் ஏறு என்று கூறப்பெறுகின்றான். இவனது தந்தை குட்டுவன் இரும்பொறை என்று குறிப்பிடப்படுகிறான். எனவே, பொறையர் குடியைச் சேர்ந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குக் குட்டுவர் குடியைச் சேர்ந்த சிற்றரசர்கள் உறுதுணையாய் விளங்கி வந்தனர். நெடுஞ்செழியன் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைத் தாக்கிய பொழுது பல குட்டுவர்களுடன் போரிட நேர்ந்தது.

முசிறிப்போர்

பல்குட்டுவரை வென்றதன் காரணமாக, கீழைச் சேரர் செல்வாக்கை ஓரளவு இவன் அடக்கிவிட்டான். அப்போது மேலைச் சேரர் இவனை எதிர்த்து நின்றனர். சேரன் செங்குட்டுவனுக்குக் குட்டுவன் சேரல், குட்டுவன்கோதை என இருமக்கள் இருந்தனர். குட்டுவன் சேரல் பரணருக்குப் பணிவிடையாளாகக் கொடுக்கப் பட்டான். குட்டுவன் கோதையே நாட்டையாண்டு வந்தான்; தன் தந்தை செங்குட்டுவனுக்குப் பிறகு தொண்டி, வஞ்சி முதலிய இடங்களில் ஆட்சி புரிந்தான். குட்டுவன் கோதையின் துறைமுகப் பட்டினமாகிய முசிறியை நெடுஞ்செழியன் தாக்கி, அவனுடைய யானைப் படையை அழித்தான். குட்டுவன் கோதையும் தோல்வியுற்றான். இதனால் நெடுஞ் செழியன் பல குட்டுவரை வென்றவன் என்று பாராட்டப் பெற்றான்.

நெல்லினூர் கொண்டது

பெருங் கப்பல்கள் வந்து தங்கி, வாணிகச் சிறப்புடன் விளங்கிய ‘நெல்லினூர்’ என்னும் ஊரையும் நெடுஞ்செழியன் கைப்பற்றினான். நெல் சிந்தம் என்னும் மேற்குக் கடற்கரைத் துறைமுகம் வாணிகத்தில் சிறப்புற்று விளங்கி, பாண்டியர்களுக்குரியதாய் விளங்கியது பற்றியும் கிரேக்க ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நெல்லினூரையே அவர்கள் நெல்சிந்தம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நெல்லி னூரையே நெடுஞ்செழியன் கைப்பற்றினான்.23 குட்டுவரையும்


23. சிலர் நெல்சிந்தம் என்பது கிழக்குக் கடற்கரைத் துறைமுகமெனக் கூறுவர். அங்ஙனமாயின் அது பாண்டியருடைய துறைமுகமாகும். அதனைக் கைப்பற்றப் பாண்டியன் முயன்றிருக்க இயலாது.