பக்கம் எண் :

420மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

சிறப்பித்தனர்.17 இவனுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் கூடல் நகரில் ஒரு போர் நடந்தது.18

கிள்ளிவளவன் என்ற சோழ அரசன் மதுரையில் வெற்றி பெற்ற செய்தி நமக்கு ஒரு வரலாற்றுத் தொடர்நிகழ்ச்சியை உய்த்துணர உதவி செய்கிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் செங்குட்டுவன் காலத்தவன். கோவலனது கொலையால் இவன் தன் அரியணையி லிருந்து வீழ்ந்து இறந்தான். பிறகு பழையன் மாறன் மதுரையில் செல்வாக்குப் பெற முயன்றான்.19 அந்த முயற்சியில் சோழன் கிள்ளி வளவன் வெற்றி பெறவே, மதுரை சோழர் வசமாகிவிட்டது. பழையன் மாறன், பின் மோகூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரலானான். சோழன் கிள்ளிவளவன் பசும்பூண் பாண்டியன் என்பவனைப் பாண்டிய நாட்டிற்கு அரசனாகச் சில காலம் ஆண்டுவரச் செய்தான்.

பசும்பூண் பாண்டியன் சோழருக்குட்பட்டு அவர்களுக்குத் திறை செலுத்திக்கொண்டு, நாட்டை ஆண்டு வந்திருக்கலாம். இந்நிலை பாண்டியரின் விடுதலையுணர்வைத் தூண்டி தன்னாட்சி பெறும் மனப்பான்மையை வளர்த்தது. இந்த உயர்வே வெற்றிவேற்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற நிலையில் நமக்கு அறிமுகமாகி மதுரையைக் கைப்பற்றி ஆண்ட நிகழ்ச்சியில் முடிந்தது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது வெற்றியில் சோழனும் சேரனும் தோல்வியுற்றத்தை அவனது வரலாற்றில் காணலாம்.

மதுரை நகரில் அரியணையில் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் அமர்ந்தபின் பழையன் மாறன் அவன் படைத் தலைவனாக விளங்கினான். மோகூர் ஆட்சிப் பொறுப்பும் அவனிடம் இருந்தது. கோசர் படையில் தலைவனாகவும் கோசர் குடிமக்களைத் தன் அரசவையில் கொண்ட மன்னனாகவும் இவன் விளங்கினான்.


17. ‘பழையன் மோகூர் அவையகம் விளங்க

நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன’ (மதுரைக். 508-509)

18. அகம். 346 : 19 - 22

19. மதுரையில் நடந்த போரில் பழையன் மாறன் கிள்ளிவளவனிடம் தோற்றுத் தன் கோநகரமாகிய மதுரையையும் யானைகளையும் குதிரைகளையும் இழந்து மோகூர் என்னும் ஊருக்கு ஓடி, அதைக் கோநகரமாகக் கொண்டு ஆளத் தொடங்கினான். இவனது தோல்வியைக் கேட்ட சேரன் கோதைமார்பன் மகிழ்ச்சியடைந்தான்.