பக்கம் எண் :

82மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

கொண்டு போருக்குச் சென்றனர்.26 உடம்பெல்லாம் வாள் பட்ட தழும்பு வரிகளும் மார்பில் வேல் பாய்ந்த விழுப்புண் தழும்புகளும் உடையவர்கள் அவர்கள்.27 போர் தொடங்கினால் இடையில் உணவைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படமாட்டார்கள். பகை வேந்தர் பட்டத்து யானையின் தந்தம், தாம் உண்ட கள்ளுக்கு விலை யாகக் கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு எளிய பொருள்.28

கொடைத் தன்மை

இவன் சிறந்த வள்ளல்; தன் நாண்மகிழ் இருக்கையில் கொடை விழாக் கொண்டாடிப் பரிசிலர்களுக்கு வேண்டியன வெல்லாம் கொடுத்தான்.29 சேரநாட்டுப் பந்தர்த் துறைமுகத்தில் கிடைத்த முத்து,30 களிறு, மா, ஆநிரை, கதிரடித்துக் குவித்துள்ள களம்31 முதலானவை அவன் வழங்கிய கொடைப் பொருள்கள்.

அக் கொடைப் பொருள்களை அவன் மழையைக்காட்டிலும் மிகுதியாகக் கொடுத்தான்; பாலைப் பண்ணில் பையுள் இசைத் திறத்தைக் கட்டினால் செவிகளில் பாயும் அருளின்பம் போலப் பரிசிலர் உள்ளம் இன்புறும்படி நல்கினாள்;32 அலர்ந்த நெய்தல்போல் மலர்ந்த முகத்துடன் கொடுத்தான்;33 பெற்றவர்கள் கனவோ என்று மருளும்படி நனவில் கொடுத்தான்;34 ஏற்றவரின் வறுமையெல்லாம் நீங்கும்படி அளித்தான்.35 கொடுக்கும்போது பெறுபவர்களின் சிறுமையை அளவுகோலாக இவன் கொண்டதில்லை. தன் பெருமை யின் தகவையே அளவுகோலாகக் கொண்டான்.36

பரிசில் நாடிவரும் வயிரியர்களைத் தன் அரண்மனைக்கு வெளியில் கண்டபொழுதே குதிரைகளுக்கு அணிகலன்களைப் பூட்டிப் பரிசிலாக அனுப்பி வைத்தான். பாசறையிலும் போர்க் களத்திலும் இருந்தபோதும் கொடுத்தான்.37 நாண்மகிழ் இருக்கையில் நடந்த கொடைப்போரில் பாடினிக்கே வெற்றி.38


26. பதிற். 66 : 15

27. ௸ 66 : 13 - 14

28. ௸ 68 : 11

29. பதிற். 65 : 13

30. ௸ 67 : 2, 5

31. புறம். 387 : 22-25

32. பதிற். 65 : 11 - 16

33. ௸ 64 : 16 - 17

34. புறம். 387 : 16

35. ௸ 387 : 12 - 13

36. ௸ 387 : 29 - 32

37. பதிற். 64 : 8 - 10, 67

38. ௸ 61 : 15 - 16, ஒப்புநோக்குக சேரலாதனின் கோட்டையைவயிரியர் அழித்து உண்டனர் (பதிற்.20:17-20)