பக்கம் எண் :

138மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

மருத நிலங்களில் வயல்களிலே நெல்லும் கரும்பும் பயிராயின. கரும்பை, ஆலைகளில் சாறு பிழிந்து வெல்லப் பாகு காய்ச்சினார்கள். கொங்கு நாடு கரும்புக்குப் பேர்போனது. ஆதிகாலத்தில் தமிழ்நாட்டில் கரும்பு இல்லை. கொங்குநாட்டுத் தகடூரையரசாண்ட அதிகமான் அரசர் பரம்பரையில், முற்காலத்திலிருந்த ஒரு அதிகமான் கரும்பை எங்கிருந்தோ கொண்டுவந்து தமிழகத்தில் நட்டான் என்று ஒளவையார் கூறுகிறார் (புறநானூறு. 99: 1-4, 392: 20-21). கரும்புக்கு பழனவெதிர் என்று ஒரு பெயர் உண்டு (பழனம்- கழினி. வெதிர் - மூங்கில்). மூங்கிலைப் போலவே கரும்பு கணுக்களையுடையதாக இருப்பதனாலும் கழனி களில் பயிர் செய்யப்படுவதாலும் பழனவெதிர் என்று கூறப்பட்டது. மருத நிலங்களில் உழவுத் தொழிலுக்கு எருமைகளையும் எருதுகளை யும் பயன்படுத்தினார்கள். குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்தவர் களைவிட மருத நிலத்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தார்கள்.

பருத்திப் பஞ்சும் கொங்கு நாட்டில் விளைந்தது. பருத்தியை நூலாக நூற்று ஆடைகளை நெய்தார்கள். நூல் நூற்றவர்கள் பெரும் பாலும் கைம்பெண்களே.

அக்காலத்தில் பண்டமாற்று நடந்தது. அதாவது, காசு இல்லாமல் பண்டங்களை மாற்றிக்கொண்டார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள். குளங்களிலும் ஏரிகளிலும் மீன் பிடித்து வந்து அந்த மீன்களை நெல்லுக்கும் பருப்புக்கும் மாற்றினார்கள். பால், தயிர், நெய்களைக் கொடுத்து அவற்றிற்கு ஈடாக நெல்லைப் பெற்றுக்கொண்டார்கள். இவ்வாறு பண்டமாற்று பெரும்பாலும் நடந்தது. அதிக விலையுள்ள பொருட்களுக்கு மட்டும் காசுகள் வழங்கப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து, அதாவது உரோம தேசத்திலிருந்து வந்த யவனக் கப்பல் வாணிகர், வெள்ளிக்காசு, பொற்காசுகளைக் கொடுத்து இங்கிருந்து விலையுயர்ந்த பொருள்களை வாங்கிக்கொண்டு போனார்கள்.