150 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
பொறையர் மேற்குக் கடற்கரைத் தொண்டியைத் தங்களுக்குரிய துறை முகப்பட்டினமாக வைத்துக் கொண்டு வாணிகஞ் செய்தனர். கொங்கு நாட்டையரசாண்ட இளஞ்சேரலிரும் பொறை ‘வளைகடல் முழவில் தொண்டியோர் பொருநன்’ என்று கூறப்படுகிறான் (9ஆம் பத்து 8 : 21). ‘திண்டேர்ப் பொறையன் தொண்டி’ (அகம். 60 : 7). யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, `தன் தொண்டியோர் அடுபொருநன்’ என்று கூறப்படுகிறான் (புறம். 17 : 13). குறுந்தொகை 128ஆம் செய்யுள் ‘திண்டேர்ப் பொறையன் தொண்டி’ என்று கூறுகிறது (குறுந். 128 :2). யவனர் தொண்டியைத் திண்டிஸ் என்று கூறினார்கள். இதனால், கொங்கு நாடு சேர அரசர் ஆட்சிக் குட்பட்டிருந்த காலம் வரையில், தொண்டித் துறைமுகம் கொங்கு நாட்டின் துறைமுகப் பட்டினமாக அமைந்திருந்தது என்று கருதலாம். பிற்காலத்தில் சோழர், கொங்கு நாட்டைக் கைப்பற்றி யரசாண்டபோது தொண்டி, கொங்குத் துறைமுகமாக அமையவில்லை. |