பக்கம் எண் :

180மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

குறியீடு என்று டி. வி. மகாலிங்கம் கருதுகிறார். சாசன எழுத்து இலாகா இதை எ என்று வாசித்திருக்கிறது. ஐ. மகாதேவன் அவர்கள் ஏ என்று வாசித்துள்ளார். மகாலிங்கம் கூறுவது போல இது ‘சித்தம்’ என்பதன் குறியீடு அன்று. பிராமி எழுத்து எ என்பதாகும். முக்கோண வடிவமாக வுள்ளது பிராமி எ என்னும் எழுத்து. அது கல்வெட்டில் வட்டமாகவும் சில சமயங்களில் எழுதப்படுகிறது. உதாரணமாக, மதுரைக்கு அடுத்துள்ள யானைமலைப் பிராமி எழுத்தில் எகர எழுத்து ஏறக்குறைய வட்டமாக எழுதப்பட்டிருப்பது காண்க. இந்த எழுத்து எகரம் என்பதில் ஐயமே யில்லை. ஐ. மகாதேவன் அவர்கள் இதை ஏ என்று வாசிப்பது சரியன்று. ஏனென்றால், இந்த எழுத்தின் உள்ளே ஒரு புள்ளி தெளிவாகக் காணப்படுகிறது. புள்ளியிருப்பதினாலே ஏகாரமன்று, எகரமே என்பது தெளிவாகத் தெரிகிறது. மெய்யெழுத்துகளும் எகர ஒகரக் குற்றெழுத் துகளும் புள்ளி பெறும் என்று இலக்கணம் கூறுகிறது. ஆகவே, அந்த இலக்கணப்படி இது ஏகாரம் அன்று, எகரமே என்பது திட்டமாகத் தெரிகின்றது. (புள்ளி பெற வேண்டிய எழுத்துகளுக்குப் பெரும்பாலும் புள்ளியிடாமலே ஏட்டுச்சுவடியிலும் செப்பேட்டிலும் கல்லிலும் எழுதுவது வழக்கம். அபூர்வமாகத்தான் புள்ளியிட்டெழுதப்படுகின்றன. இந்த எகர எழுத்துக்குப் புள்ளியிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.)

அடுத்த இரண்டாவது எழுத்தைப் பார்ப்போம். இதை டி.வி. மகாலிங்கம் அவர்கள் தி என்று வாசிக்கிறார். இது ழு என்பது தெளிவு. சாசன எழுத்து இலாகாவும் ஐ. மகாதேவனும் இதை ழு என்றே சரியாக வாசித்திருக்கிறார்கள். முதல் இரண்டு எழுத்தும் சேர்ந்தே எழு என்றாகிறது.

இனி அடுத்த 3ஆவது 4ஆவது எழுத்துகளைப் பார்ப்போம். இவை த்து என்பவை. சாசன எழுத்து இலாகா த்து என்றே வாசித் திருக்கிறது. மகாலிங்கம் த்த என்று வாசிக்கிறார். ஐ. மகாதேவன் தாந என்று வாசிக்கிறார். இப்படி வாசிப்பதற்கு யாதொரு காரணமும் இல்லை. இவ்வெழுத்துக்கள் ‘த்து’ என்பதே.

ஐந்தாவது எழுத்து ம அல்லது ம் என்பது. புள்ளியில்லை யானாலும் ம் என்றே வாசிக்கலாம். ஐ. மகாதேவனும் டி.வி. மகாலிங்கமும் ம் என்றே சரியாக வாசித்துள்ளனர். சாசன எழுத்து இலாகா இந்த எழுத்தை ப் என்று படித்திருக்கிறது. இவ்வெழுத்து ம் என்பதில் ஐயமில்லை. முதல் ஐந்து எழுத்துக்களையும் சேர்த்துப் படித்தால் எழுத்தும் என்றாகிறது.