பக்கம் எண் :

182மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

விளக்கம்:

மணிய் வண்ணக்கன் என்பது மணிக்கல் வண்ணக்கன் என்று பொருளுள்ளது. இகர, ஈற்றுச் சொல்லுடன் யகரமெய் சேர்த்து மணிய் என்று எழுதப்படுகிறது. இப்படி எழுதுவது அக்காலத்து வழக்கம். கொங்கு நாட்டில் விலையுயர்ந்த மணிக்கற்கள் அக்காலத்தில் அதிகமாகக் கிடைத்தன.

வண்ணக்கன் என்பது பொன், வெள்ளி நாணயங்களின் பரிசோதனை என்னும் பொருள் உள்ள சொல். சங்க இலக்கியங்களில் சில வண்ணக்கர்கள் கூறப்படுகின்றனர். புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் என்னும் புலவர் நற்றிணை 294 ஆம் செய்யுளைப் பாடியவர். வடம வண்ணக்கன் தாமோதரனார் குறுந்தொகை 85 ஆம் செய்யுளைப் பாடியவர். வண்ணக்கன் சோருமருங்குமரனார் என்பவர் நற்றிணை 257ஆம் செய்யுளைப் பாடியுள்ளார். அரசலூர் மலைக் குகையில் தவஞ் செய்த முனிவருக்குக் கற்படுக்கையைத் தானஞ் செய்த தேவன் சாத்தன் மணிக்கல் வண்ணக்கன்.

மணிக்கல் வண்ணக்கனான தேவன் சாத்தன் இம்மலைக் குகையில் முனிவருக்கு இடங்களைத் தானஞ் செய்ததோடு இந்தச் சாசன எழுத்துக்களையும் பொறித்தான் என்பது இதன் கருத்தாகும். எழுத்தும் புணர்த்தான் என்பதிலுள்ள உம் என்னும் இடைச்சொல், இவனே சாசன எழுத்தையும் பொறித்தான் (எழுதினான்) என்பதைக் குறிக்கிறது.

புகழியூர் (புகழூர்)

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் தாலுகாவில் புகழூர் இருக்கிறது. இந்த ஊர், திருச்சிராப்பள்ளி - ஈரோடு இருப்புப் பாதையில் ஒரு நிலையமாக இருக்கிறது. புகழூருக்கு இரண்டு கல் தொலைவில் வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்துக்கு அருகில் ஆறுநாட்டார் மலை என்னும் பெயருள்ள தாழ்வான குன்றுகளில், இயற்கையாக அமைந்துள்ள குகைகள் இருக்கின்றன. இக்குகைகளின் பாறையில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. பிராமி எழுத்துக்கள் கி.பி. 300க்கு முற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கி வந்தபடியால் இவை கடைச்சங்க காலத்திலே எழுப்பப் பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த இடங்கள் கடைச்சங்க காலத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளாக இருந்தவை.