பக்கம் எண் :

196மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

சிறு வேறுபாடுதான் உண்டு. இந்த வேறுபாட்டைச் சிற்பி உணராத படியால் இத்தவறு ஏற்பட்டிருக்கிறது.

நாகன், கீரன் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் மனிதருக்குப் பெயராக வழங்கி வந்தன. இப்பெயர்கள் சில அடைமொழிகளுடன் சேர்த்து வழங்கி வந்தன. இளநாகன், இளிசந்தநாகன், வெண்ணாகன், நன்னாகன், மூப்பேர்நாகன் முதலிய பெயர்களைக் காண்க. அல்லங் கீரன், இளங்கீரன், புல்லங்கீரன், கழார்க்கீரன், கீரங்கீரன், குறுங்கீரன், நக்கீரன், மோசிகீரன், மூலங்கீரன் முதலிய பெயர்களைக் காண்க. இந்தக் கல்வெட்டெழுத்தில் கூறப்பட்டவன் பெருங்கீரன் என்பவன். இவன் நாகனுடைய மகன். நாகனுடைய மகன் பெருங்கீரன் இந்தக் குகையில் கற்படுக்கையை அமைத்ததாக இந்தச் சாசனம் கூறுகிறது.

கீழ்க்கண்டவை புகழூர் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளில் சரித்திர ஆராய்ச்சிக்கு மிக முக்கியமானவை. 1927 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்ட இவை, எபிகிராபி இலாகாவின் 1927 - 28 ஆம் ஆண்டு அறிக்கையில் கூறப்படுகின்றன.16 ஒரே கருத்துள்ள இந்தச் சாசனம் இரண்டு இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு சாசனங்களாகக் கருதப்பட்டாலும் உண்மையில் இவை இரண்டும் ஒன்றே. இரண்டின் வாசகமும் ஒன்றே. இரண்டாவது சாசனத்தில் சில எழுத்துகள் மறைந்து விட்டன. ஆனால், இரண்டு சாசன எழுத்துகளையும் ஒப்பிட்டுப்பார்த்து, விடுபட்டுள்ள எழுத்துகளைச் சேர்த்துப் படித்துப் பொருள் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்தச் சாசன எழுத்துக்கள் இவை:

இவற்றின் வாசகம் இது:

தி அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய
கோ ஆதன் சேல்லிரும் பொறை மகன்
பெருங் கடுங்கோன் மகனிளங்
கடுங்கோ ளங்கோ ஆக அறுத்த கல்