| 198 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
பட்ட சாதவாகன அரசர்களின் நாணயங்களில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் முதல் எழுத்து தி என்றும் த்ரி என்றும் எழுதப்பட்டுள்ளன. இது திரு (ஸ்ரீ) என்பதைக் குறிக்கிறது என்பது இங்குக் கருதத்தக்கது. ஆகவே, இச்சாசனத்தின் முதலில் உள்ள தி என்பது திரு என்னும் சொல்லாக இருக்கலாம். இதைவிட வேறு பொருள் கொள்வதற்கு இல்லை. ‘இதோ’ என்று கூறுவதாக மகாதேவன் கருதுவது பொருத்தமாக இல்லை. அமணன் என்று இருக்க வேண்டிய சொல் அமண்ணன் என்று ணகர ஒற்று இடப்பட்டிருக்கிறது. இது கற்றச்சனின் தவறாக அல்லது எழுதியவரின் தவறாக இருக்கலாம். யாற்றூர், செங்காயபன் என்னும் சொற்களில் யாதொரு கருத்து வேறுபாடும் இல்லை. முதல் வரியின் கடைசியில் உறைய என்னுஞ் சொல் இருக்கிறது. இதை மகாதேவன் உறைய் என்று வாசித்துள்ளார். இது தவறு என்று தோன்றுகிறது. உறைய என்பதே இதன் வாசகம். “ஆற்றூர் செங்காய பன் உறைய ... ... அறுத்த கல்” என்று வாக்கியம் செம்மையாக முடிகிறது காண்க. இதற்கு மாறாக வாசிப்பது தவறு என்று தோன்றுகிறது. இனி இந்தச் சாசனங்களில் வருகிற அரசர்களின் பெயர்களைப் பார்ப்போம். முதல் சாசனத்தில் கோ ஆதன் சேரலிரும்பொறை என்று பெயர் காணப்படுகிறது. இரண்டாவது சாசனத்தில் இது (சே)ல்லிரும் புறை என்று எழுதப்பட்டிருக்கிறது. இரும்பொறை என்பதே சரியான வாசகம். சேரலிரும்பொறை என்னும் பெயரில் இரண்டாவது எழுத் தாகிய ரகரம் கல்வெட்டில் விடப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் சேரலிரும்பொறை என்னும் பெயரைக் காண்கிறோம். குடக்கோ இளஞ் சேரலிரும்பொறை, அஞ்துவஞ்சேரல் இரும்பொறை, கோப் பெருஞ் சேரலிரும்பொறை, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் பெயர்களைக் காண்க இதனால், சேரலிரும்பொறை என்னும் பெயர் இந்தச் சாசனங்களில் சேல்லிரும்பொறை என்று தவறாக எழுதப்பட்டிருப்பது நன்கு தெரிகின்றது. ஆனால், ஐராவதம் மகாதேவன் செல்லிரும்பொறை என்று படிக்கிறார். இதற்குச் சான்றாக இவர் காட்டுகிற சான்றுகளாவன: செல்லிக்கோமான் (அகம். 216), செல்வக் கோமான் (பதிற்று. 67), செல்வக்கடுங்கோ (பதிற்று. பதிகம் 8), சேரமான் இக்கற் பள்ளித் துஞ்சிய |