| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 199 |
செல்வக் கடுங்கோ வாழியாதன் (புறம். 387), செல்லிக்கோமான், செல்வக் கோமான், செல்வக்கடுங்கோ என்னும் பெயர்களில் செல் இருக்கிற படியால், இந்தக் கல்வெட்டில் வருகிற பெயர் செல்லிரும் பொறை என்று இவர் எழுதுகிறார். இது பற்றி வாதிக்கவேண்டுவ தில்லை. இவர் கூறுவதில் உள்ள செல், செல்வம் என்னும் சொல் இச்சாசனத்தில் இடம் பெறவில்லை. சேரல் என்பதே தவறாக சேலிரும் பொறை என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனங்களில் கூறப்படுகிற அரசர்கள் யார் என்பது பற்றிப் பார்ப்போம். திரு. ஐ. மகாதேவன், இச்சாசனங்களில் கூறப்படுகிற அரசர்களைப் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்துக்களின் தலைவர்களுடன் பொருந்திக் கூறுகிறார். ‘கோ ஆதன் செல்லிரும்பொறை’ என்று கல்வெட்டில் கூறப்படுகிறவன் 7 ஆம் பத்தின் தலைவனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும், கடுங்கோன் என்று கல்வெட்டில் கூறப் படுகிறவன் 8ஆம் பத்தின் தலைவனாகிய தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும்பொறை என்றும், இளங்கடுங்கோ என்று கல்வெட்டில் கூறப்படுகிறவன் 9 ஆம் பத்தின் தலைவனான இளஞ்சேரலிரும் பொறை என்றும் பொருந்திக் கூறுகிறார். கல்வெட்டில் கூறப்படுகிற முதல் அரசன் பெயர் கோ ஆதன் சே(ர)ல்லிரும் பொறை என்பது. ஐ. மகாதேவன் ‘செல்லிரும் பொறை’ என்று வாசிப்பது தவறு. 7 ஆம் பத்தின் தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று கூறப்படுகிறான். இதில் வருகிற கடுங்கோ என்னும் பெயர் இந்தக் கல்வெட்டுகளில் கூறப்படவில்லை. கல்வெட்டுகள் கூறுகிற கோ ஆதன் சே(ர)லிரும் பொறைக்குக் கடுங்கோ என்னும் பெயர் இருந் திருந்தால் அப்பெயரைச் சாசனங்கள் கூறியிருக்கு மன்றோ? மற்ற இரண்டு அரசர்களைப் பெருங்கடுங்கோன், இளங்கடுங்கோன் என்றும் கல்வெட்டுகள் சிறப்பாகக் கூறுகின்றன. முதல் அரசனுக்கு கடுங்கோ என்னும் பெயரைக் கல்வெட்டுக்கள் கூறாதபடியால், சேரலிரும் பொறையும் செல்வக் கடுங்கோவாழியாதனும் வெவ்வேறு அரசர் என்பதும் இருவருக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை என்பதும் வெளிப்படை திரு. மகாதேவன் செல் என்னும் பிழையான பொருளற்ற சொல்லை வைத்துக்கொண்டு செல்வக் கடுங்கோவுடன் பொருத்துவது ஏற்கத்தக்கதன்று. ‘செல்லிரும் பொறை’ என்று எந்த அரசனுக்கும் பெயர் இருந்ததில்லை என்பதைச் சங்க இலக்கியம் பயின்றோர் நன்கறிவார்கள். |