பக்கம் எண் :

200மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

கல்வெட்டுகள் இரண்டாவது அரசனாகக் கூறுகிற பெருங்கடுங் கோனைப் பதிற்றுப்பத்தின் 8ஆம் பத்துத் தலைவனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையுடன் திரு. மகாதேவன் பொருத்திக் கூறுவதும் தவறு. இவ்விரண்டு அரசர்களுக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை. ஏனென்றால், 8 ஆம் பத்தில் பெருஞ்சேரலிரும் பொறையைப் பாடுகிற அரிசில் கிழார் அவனுடைய அமைச்சனாக இருந்தவர். மேலும், அவன் செய்த தகடூர்ப் போரில், போர்க்களத்தில் உடன் இருந்தவர். அவர் இவ்வரசனைப் பாடிய செய்யுட்களில் இவனைக் கடுங்கோன் என்று ஓரிடத்திலாவது கூறவில்லை. தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கடுங்கோன் என்று பெயர் இருந்திருக்குமானால் அந்தச் சிறப்பான பெயரை அவர் கூறாமல் விட்டிருப்பாரா? ஆகவே சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோன் பதிற்றுப்பத்து 8 ஆம் பத்துத் தலைவனாகிய பெருஞ்சேரலிரும்பொறை யல்லன் என்பது வெளிப்படை. ஐ. மகாதேவன் இருவரையும் ஒருவராக இணைத்துப் பிணைப்பது ஏற்கத்தக்கதன்று.

கல்வெட்டுகள் கூறுகிற இளங்கடுங்கோவைப் பதிற்றுப்பத்து 9ஆம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறையுடன் திரு. மகாதேவன் பொருத்திக் கூறுவதும் தவறாக இருக்கிறது. இளஞ்சேர லிரும்பொறை மீது 9 ஆம் பத்துப் பாடின பெருங்குன்றூர்கிழார் அச்செய்யுட்கள் ஒன்றிலேனும் அவனைக் கடுங்கோ அல்லது இளங்கடுங்கோ என்று கூறவே இல்லை. இந்தச் சிறப்பு அவனுக்கு இருந்திருக்குமானால் இதனை அவர் கூறாமல் விட்டிருப்பாரா? இப் பெயர் இவனுக்கு இல்லாதபடியால் அவர் இப்பெயரைக் கூறவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

மேலும், சாசனங்கள் பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ என்று கூறுகின்றன. திரு. மகாதேவன், பெருங்கடுங்கோவைத் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை என்றும், இளங்கடுங்கோவை அவன் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்றுங் கூறுகிறார். இதிலும் இவர் தவறு படுகிறார். தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறையின் மகன் இளஞ்சேரலிரும்பொறை என்று இவர் கூறுவது தவறு. பெருஞ்சேரலிரும்பொறையின் தம்பியாகிய குட்டுவன் இரும்பொறையின் மகன் இளஞ்சேரலிரும்பொறை என்று பதிற்றுப்பத்து கூறுகிறது.