| 212 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
இருந்தது. அஃதாவது, நெல்லூர் மாவட்டத்தின் தென்பகுதி (வட பெண்ணைக்குத் தென்பகுதி), சித்தூர், செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய இராச்சியமாக இருந்தது. பல்லவரின் தலைநகரம் காஞ்சிபுரம் மகேந்திரவர்மன் காஞ்சிபுரத்தில் இருந்து அரசாண்டான். பல்லவரின் துறைமுகப்பட்டினம் கடன்மல்லை. கடன்மல்லையிலே மகேந்திரன் மகனான நரசிம்மவர்மன் (முதலாவன்) (இவனுக்கு மாமல்லன் என்னும் சிறப்புப்பெயர் உண்டு) இளவரசனாக இருந்தான். மல்லை அல்லது கடன்மல்லை என்னும் துறைமுகப் பட்டினத்திற்கு மகேந்திரன் காலத்தில் மகாபலிபுரம் என்னும் பெயர் வழங்கவில்லை. மகேந்திரன் மகனான நரசிம்மவர்மன் பல்லவ நாட்டின் மன்னனான பிறகு, தன் சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரை மல்லைக்குச் சூட்டி மாமல்லபுரம் என்று வழங்கினான். (மாமல்லபுரம் என்னும் பெயர் பிற்காலத்தில் மகாபலிபுரம் என்று மருவி வழங்கலாயிற்று) ஆகவே, மகேந்திரவர்மன் காலத்தில் மாமல்லபுரம் மல்லை என்றும் கடல்மல்லை என்றும் பெயர்பெற்றிருந்தது.1 |