| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 213 |
இவன் தன் பெயரினால் மகேந்திரமங்களலம் என்னும் ஊரை மாமண்டூர்ப்பற்றில் ஏற்படுத்தினான் என்பதைத் திருப்பருத்திக் குன்றத்து வர்த்தமானர் கோயில் சாசனத்தினால் அறியலாம்.1 மாமண்டூரில் ஓர் ஏரியைச் சித்ரமேகத் தடாகம் என்று தன் பெயரினால் ஏற்படுத்தினான். தன் பெயரினால் இன்னொரு ஊராகிய மகேந்திர வாடியை (மகேந்திரபாடி) உண்டாக்கினான். இவ்வூர் வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகா சோளிங் கூருக்குத் தென் கிழக்கே மூன்று மைலில் உள்ளது. மகேந்திரவாடியில் மகேந்திரத் தடாகம் என்னும் ஏரியைத் தன் பெயரினால் உண்டாக்கினான். மகேந்திரன் சோழநாட்டிலே தன் பெயரால் மகேந்திரப்பள்ளி என்னும் ஊரையமைத்து அதில் தன் பெயரால் மகேந்திரப்பள்ளி என்னும் சிவன்கோயிiல அமைத்தான் என்று தெரிகிறது. மகேந்திரப்பள்ளி என்பது மயேந்திரப் பள்ளி என்று மருவி வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்தர் இந்தக் கோயிலைக் பாடியுள்ளார். அவர் பாடிய ஒரு பாடல் இது: “நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச் சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன் மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுட் கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.” மகேந்திரவர்மன் குகைகோயில்களை அமைத்ததோடு செங்கல் கருங்கல் முதலியவைகளைக் கொண்டும் சில கோயில்களை அமைத்தான். அவ்வாறு அமைத்த கோயில்களில் மயேந்திரப்பள்ளிக் கோயிலும் ஒன்றாக இருக்கலாம். இவன் கட்டுக் கோயிலையும் அமைத்தான் என்பதை துப்ராய் அவர்கள் எழுதிய ‘மகேந்திரவர்மனின் காஞ்சி புரக் கல்வெட்டுக்கள்.’2 என்னும் சிறு நூலில் காண்க. மகேந்திரவர்மன் பல சிறப்புப் பெயர்களைக் கொண்டிருந்தான். மகேந்திரன், மகேந்திரவர்மன்,மகேந்திர விக்ரமவர்மன்,
1. Epi. Ind. Vol II. No 15. P. 115. 2. Conjeevaram Inscriptions of Mahendravaram |