பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 255 |
ஆறுமுதல் தெற்கே வடபெண்ணை ஆறுவரையிலும், மேற்கே அரபிக்கடல் முதல் கிழக்கே வங்காளக் குடாக்கடல் வரையிலும் பரவி யிருந்தது. இந்தப் பெரிய இராச்சியத்தை நரசிம்மவர்மன் காலத்தில் அரசாண்டவன் புலிகேசி என்பவன். இவனை இரண்டாம் புலிகேசி என்பர். புலிகேசியைப் புளகேசி என்றும் கூறுவர். புலிகேசிக்கு சத்யாஸ்ரயன், வல்லவன், வல்லபராசன், பிருதுவி வல்லபன், பரமேசுவரன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. புலிகேசியின் தலைநகரம் வாதாபி என்பது. இதனைப் பாதாமி என்றுங் கூறுவர். புலிகேசி, தன்மேல் படையெடுத்து வந்த ஹர்வூர்த்தனனை வென்று புகழ்பெற்றவன். இவன் புகழ் உலகமெங்கும் பரவியிருந்தது. புலிகேசி, தன்னுடைய இராச்சியத்திற்குத் தெற்கேயிருந்த பல்லவ இராச்சியத்தையும் தன்னுடைய இராச்சியத்துடன் சேர்த்துக் கொள்ள விரும்பி, அடிக்கடி பல்லவ நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். மண்ணாசை கொண்டு பல்லவநாட்டின்மேல் படையெடுத்து வந்தபோதெல்லாம், இவன் பல்லவர்களால் முறியடிக்கப்பட்டான். கடைசியாகக் காஞ்சிபுரத்துக்கு அடுத்த மணிமங்கலத்தில் நடந்த போரில் புலிகேசி, கொல்லப்பட்டான் என்பதையும், பிறகு நரசிம்ம வர்மன் புலிகேசியின் தலைநகரமான வாதாபியைக் கைப்பற்றி அதில் வெற்றிக்கம்பம் நாட்டினான் என்பதையும் முன்னமே கூறினோம். நரசிம்மவர்மன் புலிகேசியைக் கொன்று வாதாபி நகரத்தைக் கைப்பற்றியது கி. பி. 642 - ஆம் ஆண்டிலாகும். பிறகு வாதாபி நகரம் 13 ஆண்டுகள் அரசனில்லாமல் இருந்தது. பிறகு கி. பி. 655-இல் புலிகேசியின் இளைய மகனான விக்கிரமாதித்தியன், சளுக்கிய இராச்சியத்தின் அரசனானான். இவனை முதலாம் விக்கிரமாதித்தியன் என்பர். இவன் கி. பி. 655 முதல் 681 வரையில் அரசாண்டான். இவனுக்குச் சத்தியாஸ்ரயன், ரணரசிகன், அநிவாரிதன், ராஜ மல்லன், வல்லபன், ஸ்ரீ பிருதுவி வல்லபன், மகாராஜாதிராஜ பரமேசு வரன், பட்டாரகன் முதலிய சிறப்புப் பெயர்கள் உண்டு. இவன் அரசனானவுடன், நரசிம்மவர்மன் கைப்பற்றிக் கொண்ட சளுக்கிய நாட்டின் தென்பகுதிகளை மீட்டுக் கொண்டான். இரண்டாம் புலிகேசியை நரசிம்மவர்மன் வென்று புலிகேசியின் சில நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டதையும், சில ஆண்டுகளுக்குப் பிறகு விக்கிர |