பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு287

“இவ்வாறு கடல்வளம் பெற்றிருந்த பண்டைத் துறைமுகப் பட்டினம், முதல் நரசிம்மவர்மனால் பின்பு புதுப்பிக்கப்பட்டு மாமல்லன் என்ற அவன் சிறப்புப்பெயரைப் பெற்றிருத்தலும், அதனால், கடன் மல்லை என்ற தன் பழம் பெயரை யன்றி, மாமல்லபுரம்என்று புதுப் பெயரும் அதற்குப் பெரு வழக்காயமைந்திருத்தலும் கூடியனவே.”

இவ்வாறு மாமல்லை என்பதற்கு மாமல்லபுரம் என்னும் பொருளை இவர் ஒப்புக்கொள்கிறார். இதனோடு நிற்கவில்லை. மாமல்லன் நரசிம்மவர்மனுடைய தந்தையாகிய முதலாம் மகேந்திரவர்மனுக்குச் சத்துரு மல்லன் என்னும் சிறப்புப் பெயர் உண்டென்பதைக் கூறி சத்துருமல்லன் என்னும் பெயரால் மல்லை என்னும் பெயர் வந்திருக்கக்கூடும் என்று குறிப்பாகக் கூறுகிறார்.1 இவர் குறிப்பாகக் கூறுவது போல இவ்வூருக்குச் சத்துருமல்லபுரம் என்ற பெயர் வழங்கியதாக இதுவரையில் சாசனங்களிலும் இலக்கியங்களிலும் சான்று கிடையாது. ஆகவே, மாமல்லை என்பது மாமல்லபுரம் என்பது உறுதியாகிறது.

மேலும், அய்யங்கார் அவர்கள் மாமல்லபுரத்து ஆதிவராகர் சந்நிதியுள் மகேந்திரவர்மனுக்கும் அவன் தந்தை சிம்ம விஷ்ணுவுக்கும் சிலையுருவங்கள் உள்ளன என்று கூறி அதனால் அக் கோயில் நரசிம்மவர்மன் காலத்துக்கு முன்பே ஏற்பட்ட தென்று கூறுகிறார். இதுவும் தவறு. ஆதிவராகர் சந்நிதியுள், நரசிம்மவர்மன் காலத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட சிங்கத்தூண்கள் இருப்பதனால், அக்கோயில் நரசிம்மன் காலத்துக்கு முற்பட்டதல்ல.

எனவே, பூதத்தாழ்வார் மாமல்லையாகிய மாமல்லபுரத்தைக் கூறுகிறபடியினாலே, அப்பெயர் ஏற்பட்ட மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் அல்லதுஅதற்குப் பிற்பட்ட காலத்தில் இருந்தவராதல் வேண்டும். மற்ற ஆதாரங்களைக் கொண்டு பார்கிறபோது, நரசிம்ம வர்மன் காலத்திலே இருந்தவராகத் தெரிகிறார். ஆகவே அவர் காலத்தில் அவருடன்நண்பர்களாக இருந்த மற்ற மூன்று ஆழ்வார் களும் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவராதல் வேண்டும் என்பதில் ஐயமில்லை.