பக்கம் எண் :

  

7. வற்கடம்

நரசிம்மவர்மன் காலத்தில் பல போர்கள் நடந்தன. சளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி, பலமுறை பல்லவநாட்டில் படை யெடுத்து வந்தான். அந்தப் போர்களில் அவனை எதிர்த்து நரசிம்ம வர்மன் போராடி வெற்றிபெற்றான். அல்லாமலும், நரசிம்மவர்மன் புலி கேசியின் தலைநகரமான வாதாபிநகரைத் தாக்குவதற்குச் சேனையைத் திரட்டி அந் நகரத்தைத் தாக்கி வெற்றிபெற்றான். சளுக்கியருடன் நிகழ்ந்த போர்கள் அல்லாமல் சோழர், பாண்டியர், சேரர், களபர ருடனும் போர்செய்து வென்றான் என்று கூறப்படுகிறான். போரினால் நாட்டிற்கு வறுமையும் துன்பமும் உண்டாகும். அடிக்கடி பல்லவ நாட்டில் நடைபெற்ற போரின் காரணமாகப் பொருள் நெருக்கடி ஏற்பட்டிருக்க வேண்டும். அதனுடன் மழை பெய்யாமல் வற்கடமும் உண்டாயிற்று. இதனால், நாட்டில் விளைவு குறைந்து பஞ்சம் ஏற்பட்டது. நரசிம்மவர்மன் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப்பற்றி, இவன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தமது தேவாரங்களில் குறிப்பிடுகிறார்கள்.

“கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்
பூன்னெடுங் காலம் மழைதான் மறக்கினும் பஞ்சழண்டென்
றென்னோடும் சூளறும் அஞ்சல்நெஞ்சே! இமையாத முக்கண்
பொன்னெடுங் குன்றம் ஒன்றுண்டு கண்டீர்! இப்புகலிடத்தே”

என்றும்,

“தப்பில் வானம் தரணி கம்பிக்கி லென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்பமாஞ் சேறைச் செந்நெறி மேவிய
அப்பனாருளர்; அஞ்சுவ தென்னுக்கே!”