314 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
என்று இவனை இவனுடைய சரசனம் கூறுகிறது. தொண்டமண்டலத் தின் வடபகுதியிலுள்ள குடிமல்லம், திருவல்லம் முதலிய பகுதிகளை இவன் அரசாண்டான். இவன், நந்திவர்மனுடைய 17-ஆம் ஆண்டில், மூன்று கிராமங்களை ஒன்றாக இணைத்து அதற்கு விடேல் விடுகு விக்கிரமாதித்திய சதுர்வேதிமங்கலம் என்று பெயர் இட்டான்.13 விடேல் விடுகு என்பது நந்திவர்மனுடைய சிறப்புப் பெயர். நந்தியின் சிறப்புப் பெயரையும் தன்னுடைய இயற்பெயரையும் ஒன்று சேர்த்து இவ்வூருக்கு இவ்வாறு பெயரிட்டான். இவனுடைய இன்னொரு சாசனம், சித்தூர் மாவட்டத்து சந்திரகிரி தாலூகா அவிலால கிராமத்து கபிலேசுவரர் கோவிலில் இருக்கிறது. இது, விஜயநந்தி விக்கிரமவர்மனின் 21-வது ஆண்டில் எழுதப்பட்டது. இந்தச் சாசனத்தில் இச் சிற்றரசன் விக்கிரமாதித்திய மகாபலி வாணராயர் என்று கூறப்படுகிறான்.14 நரசிங்க முனையரையர் திருமுனைப்பாடி நாட்டை அரசாண்ட சிற்றரசர். திருநாவலூர் என்பது இவருடைய தலைநகரம். நரசிங்க முனையரையர் சைவ அடியார்களில் ஒருவர். “தேடாத பெருவளத்தில் சிறந்ததிரு முனைப்பாடி நாடாளுங் காவலனார் நரசிங்க முனையரையர்” என்று இவரைப் பெரியபுராணம் கூறுகிறது.15 இவர், தெம்முனை கள் பல கடந்து (பல போர்களில் பகைவரை வென்று) அரசாண்டார் என்று பெரிய புராணம் கூறுகிறபடியினாலே, இவர் தமது மன்னராகிய நந்திவர்மன் செய்த போர்களிலே பங்கு கொண்டார் என்று கருதலாம். இந்த நரசிங்க முனையரையர், நம்பி ஆரூராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வளர்ப்புத் தந்தை என்று பெரியபுராணம் கூறுகிறது.16 தென் ஆர்க்காடு மாவட்டத்து திருக்கேயிலூர் தாலுகா மணலூர் பேட்டைச் சாசனம் ஒன்று, நந்திவர்மனுடைய சாமந்த அரசர்களில் வயிரமேகன் என்பவனைக் கூறுகிறது.17 இவன், திருக்கோயிலூர் வட்டாரத்தை அரசாண்ட சிற்றரசனாகக் காணப்படுகிறான். இவன் தகப்பன் பெயர் வாணகோவடிகள் சித்தவடவன் என்பது. சேனைத் தலைவர் நந்திவர்மனுடைய சேனைத் தலைவர்களில் கோட் புலி என்பவரும் ஒருவர். இவரைக் கோட்புலிநாயனார் என்று பெரிய |