பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு317

என்பதாம். பல்லவ அரசரின் முத்திரை எருது. ஆகவே, அவர் களுடைய திருமுகங்களிலும் செப்பேட்டுச் சாசனங்களிலும் எருது (விடை) முத்திரை பொறிக்கப்படுவது வழக்கம். விடேல் விடுகு என்பது பல்லவ அரசரின் ஆணையைக் குறிப்பது.

“வினைவார்கழல் நந்தி விடேல் விடுகின், கணைவார் முரசு” என்றும், “விண்தொடும் கிரியளவும் வீரஞ்செல்லும் விடேல் விடுகு”23 என்றும் கலம்பகம் இப்பெயரைக் கூறுகிறது. விடேல் விடுகு என்னும் சிறப்புப் பெயரையுடைய ஊர்களும் ஏற்படுத்தப்பட்டன. விடேல் விடுகு விக்கிரமாதித்திய சதுர்வேதி மங்கலம் என்பதும், விடேல் விடுகு குதிரைச்சேரி24 என்பதும் அவ்வாறு ஏற்பட்ட பெயர்களாம்.

அவனி நாராயணன் என்னும் பெயரையும் கலம்பகம் கூறுகிறது. “அலைகதிர் வேல்படை அவனி நாராயணன்” என்றும், “அதிர்குல மணிநெடுந்தேர் அவனிநாரணன்”25 என்றும் கூறுவது காண்க. வட ஆர்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த காவேரிப்பாக்கத்தின் பழைய பெயர் அவனி நாராயண சதுர்வேதிமங்கலம் என்பது. இப்பெயர் நந்திவர்மனுடைய சிறப்புப் பெயரினால் ஏற்பட்டது.26

உக்ரமகோபன், குவலய மார்த்தாண்டன், தேசபண்டாரி, மானோதயன், நயபரன், நயபானு என்னும் பெயர்களையும் நந்திக்கலம்பகம் கூறுகிறது.27

முரசு

தெள்ளாறெறிந்த நந்திவர்மனுடைய முரசு, கடுவாய்ப் பறை என்று பெயர் பெற்றிருந்தது.

“விண்ட வேந்தர் தந்நாடும்
       வீரத் திருவும் எங்கோனைக்
கண்ட வேந்தர் கொண்மின்கள்
       என்னும் கன்னிக் கடுவாயே”28

“கடுவாய் இரட்ட வளைவிம்ம மன்னர்
       கழல்சூட வங்கண் மறுகே”29

“கடுவாய் போல் வளையதிர நின்னோடு
       மருவார்மன்னர் மனந் துடிக்கும்மே”30