பக்கம் எண் :

318மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

என்பன நந்திக் கலம்பகம். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் கடுவாய்ப்பறையைப் பெற்றிருந்தது போலவே இவனுடைய பாட்னான இரண்டாம் நந்திவர்மனும் கடுவாய்ப் பறையைப் பெற்றிருந்தான். இதனைத் திருமங்கையாழ்வார் கூறுகிறார்:

“கறையுடையவாள் மறமன்னர் கெடக்
       கடல்போல் முழங்கும்குரல் கடுவாய்
பறையுடைப் பல்லவர் கோன்”

என்பது அப்பாசுர வாசகம்.31

கழற்சிங்கன்

தெள்ளாறெறிந்த நந்திவர்மனுக்குக் கழற்சிங்கன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. போரில் வெற்றி பெற்ற வீரர்கள் தமது கால்களில் வீரக்கழல் அணிவது வழக்கம். வீரக்கழல் அணிந்த வீரர்களைப் பற்றிச் சங்க நூல்கள் கூறுகின்றன. தெள்ளாறு, நள்ளாறு, பழையாறு, குறுகோடு முதலிய போர்களில் பகைவரை வென்ற நந்திவர்மன் காலில் வீரக்கழல் அணிந்து சிங்கன் (போரில் சிங்கம் போன்றவன்) என்று சிறப்புப் பெயர் படைத்திருந்ததில் வியப்
பில்லை. நந்திக்கலம்பகம், குறைகழல் நந்தி என்றும், பொற்கழல் நந்தி என்றும், அறைகழல் முடித்தவன் என்றும் கூறுகிறது.32 மேலும் பல்லவர் கோளரி என்றும் கூறுகிறது.33 (கோளரி = சிங்கம்)

கழற்சிங்கன்

இவ்வரசன் காலத்தில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில்,

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”

என்று கூறியது தெள்ளாறெறிந்த நந்திவர்மனைத்தான் என்று சரித்திரம் ஆராய்ந்தோர் கூறுகிறார்கள். “கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்” என்று நிகழ் காலத்திலே கூறுகிறபடியினாலே, சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திலே தெள்ளாறெறிந்த நந்திவர்மன் இருந்தான் என்பது தெரிகிறது. காடவர் என்பது பல்லவ அரசர்களின் குலப்பெயர். சுந்தரமூர்த்தி சுவாமிகள்,