பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு319

“மண்ணுலகம் காவல் பூண்ட
       உரிமையால் பல்லவர்க்குத் திரைகொடா
மன்னவரை மறுக்கஞ் செய்யும்
       பெருமையால் புலியூர்ச் சிற்றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றாமன்றே”

என்று கோயில் பதிகத்தில் பாடியதும் இப்பல்லவனையே என்பர்.

காடவர்கோன் கழற்சிங்கனாகிய தெள்ளாறெறிந்த நந்திவர் மனைச் சிவனடியார்களில் ஒருவனாகச் சுந்தர மூர்த்தி நாயனார் கூறியதுபோலவே, நந்திக்கலம்பகமும் இவனைச் சிறந்த சிவபக்தன் என்று கூறுகிறது.

“இலகொளி மூவிலை வேல்
       இறைவாநின் இயற்கயிலைக்
குலகிரியும் அரும றையும்
       குளிர்விசும்பும் வறிதாக
அலைகதிர்வேல் படைநந்தி
       அவனி நாராயணன் இவ்
உலகுடையான் திருமுடியும்
       உள்ளமுமே உவந்தனையே”

என்றும்

“சிவனை முழுதும் மறவாத சிந்தையான்”

என்றும் கூறுவது காண்க.34 இவ்வரசனுடைய வேலூர்ப் பாளையத்துச் செப்பேட்டுச் சாசனமும் இவனைச் சிவபக்தன் என்று கூறுகிறது. வடமொழியில் கூறப்பட்ட அந்தச் சாசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இது:-

“எதிர்காலத்தில் உலகத்தை ஆளப்போகிறவர்களே! அரசர்களுக்குக் கொடிபோன்ற நந்திவர்மன், சிவபெருமானுடைய மலரடிக ளாகிய சூளாமணியால் விளங்கப்பெற்ற தனது தலையை வணங்கித், தாமரைபோன்ற கைகளைக்குவித்து இந்த நல்ல வேலையை (இந்த அறச்செயலை) எப்போதும் காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறான்.”35 ஆகவே இவன் சிறந்த சிவபக்தன் என்பதில் ஐயமில்லை.