பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு321

இந்த யோசனையைக் கூறுகிறேன். அது என்னவென்றால்: மூன்றாம் நந்திவர்மனுக்குக் கீழ்ப்பட்டிருந்த சிற்றரசனாகிய பரதுர்க்கமர்த்தனன், நந்திவர்மனின் வடநாட்டுப் படையெடுப்பில் கலந்து கொண்டிருக்கக் கூடும். இராஷ்டிரகூட அரசனுடன் நடந்த அந்தப் போரிலே, இராஷ்டிர கூட அரசனுக்கு உதவியாக, அவனுக்குக் கீழடங்கியிருந்த சளுக்கிய சிற்றரசனும் வந்திருக்கக் கூடும். குறுகோட்டைப் போரிலே, அந்தச் சளுக்கிய சிற்றரசனைத் தென்னாட்டுக் குறுநில மன்னன் (கொடும் பாளூர் பரதுர்க்கமர்த்தனன்) வென்றதினாலோ, இராஷ்டிரகூட அரசனைக் குறுகோட்டைப் போரில் வென்ற பிறகு வாதாபி நகரத்தின் மேல் பல்லவ அரசன் நரேடியாகப் படையெடுத்துச் சென்றபோது, பரதுர்க்கமர்த்தனனும் அவ்வாதாபிப் போரிலே கலந்துகொண்ட படியினாலோ, அவன் வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றிருக்கக்கூடும். சுழற்சிற்க நாயனாரைப் பற்றிப் பெரியபுராணம், அவ்வரசன் வடநாட்டுப் போரை வென்றதாகக் கூறுவதனாலும் அக்காலத்து இலக்கியங்களையும் சாசனங்களையும் ஆராய்ந்து பார்ப்பதனாலும் இது தெரியும்.”

இவ்வாறு கூறிய அவர், மேற்படி அடிக்குறிப்பில் மேலும் கூறுகிறார்: “குறுகோட்டையை வென்றபடியினாலேயே பரதுர்க்க மர்த்தனன் வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளக் காரணமாயிருந்தது” என்று கூறுகிறார்.

இவர் கூறுவதைப் பகுத்தறிவுள்ளவர் எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரையுடைய பரதுர்க்க மர்த்தனன், கி. பி. 7-ஆம் நூற்றாண்டில், வாதாபி கொண்ட நரசிம்ம வர்மன் காலத்தில் இருந்தவன். அவனை கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்த தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்தவனாகக் கூறுவது தவறு. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில், கொடும்பாளூர் சிற்றரசர், பல்லவ அரசருக்கு உதவியாக இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், முத்தரையர் என்னும் சிற்றரசர் பல்லவர் சார்பில் இருந்ததைச் சாசனங்கள் கூறுகின்றன. மூன்றாம் நந்திவர்மன், குறுகோட்டையை வென்றதாக நந்திக்கலம்பகம் கூறுகிறதே தவிர, வாதாபி நகரத்தை வென்றதாக எங்கும் கூறவில்லை. அவனுடைய சாசனங்களும் கூறவில்லை. நந்திவர்மன் வாதாபியை வென்றிருந்தால் கட்டாயம் அச்செய்தியை நந்திக்கலம்பகம் கூறியிருக்கும். பரதுர்க்கமர்த்தனன் குறுகோட்டையை வென்றிருந்தால், குறுகோட்டைஜித் என்று பெயர் பெறுவானேயல்லாமல், வாதாபிஜித் என்று எப்படிப் பெயர்பெறுவான்?