பக்கம் எண் :

370மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும்,
விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும்”36

இவ்வாறு, வரகுணபாண்டியன் சிறந்த சிவபக்தனாக விளங்கினான் என்று புராணங்கள் கூறுகின்றன.

பாணபத்திரர்

வரகுணபாண்டியன் அவையில் பேர்போன இசைப்புலவராக இருந்தவர் பாணபத்திரர் என்பவர். இவருடைய வரலாற்றை இந்நூல் இசைக்கலை என்னும் பகுதியில் காண்க. பாணபத்திரரும் சிறந்த சிவபக்தர். இவர்பொருட்டுச் சிவபெருமான் சாதாரி பாடின திருவிளையாடல், திருமுகங்கொடுத்த திருவிளையாடல், பலகையிட்ட திருவிளையாடல்களைச் செய்தருளினார் என்று திருவிளையாடற் புராணங்களினால் அறிகிறோம்.

மாணிக்கவாசகர்

பாண்டி நாடிலே திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்தார். அவருக்குப் பிள்ளைப் பருவத்தில் இடப்பட்ட பெயர் வாதவூரர் என்பது. இவர் இளமைப் பருவத்திலேயே பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ் மொழிக் கல்வியை நன்கு கற்றவர் என்பது இவர் பிற்காலத்தில் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் என்னும் நூல்களிளிலருந்து தெரிகிறது. இவர் தக்க வயதடைந்தபோது பாண்டிய அரசன் இவரைத் தன்னுடைய அமைச்சராக நியமித்தான்; இவருக்குத் தென்னவன் பிரமராயன் என்னும் பட்டப் பெயரும் அளித்தான்.

பாண்டியனுக்குக் குதிரைப்படை தேவையாக இருந்தது. குதிரைகள் வாங்கும் பொருட்டுப் பெருந்தொகையான பொருளைத் தென்னவன் பிரமராயரிடம் கொடுத்துத் துறைமுகத்திற்கு அனுப்பினான் பாண்டியன். அப்பொருளைக்கொண்டு குதிரைகள் வாங்கச் சென்ற அமைச்சர், பெருந்துறை என்னும் துறைமுகத்திற்குச் சென்றார். சென்றவர் அங்குக் குருத்த மரத்தடியிலே மாணாக்கர் சூழவீற்றிருந்த ஒரு ஞானா சிரியரைக் கண்டார். கண்டு அவரிடம் ஞானோபதேசம் பெற்றார். தாம் வந்த காரியத்தை மறந்து பக்தியில் ஈடுபட்டுத் தம்மிடமிருந்த பெரும் பொருளை யெல்லாம் சைவத் திருப்பணிக்குச் செலவு செய்தார்.