பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு371

குதிரைகள் வந்து சேராதபடியினாலே பாண்டியன் திருமுகம் எழுதி அனுப்பினான். அதனைக் கண்ட அமைச்சர் மதுரைக்குச் சென்று, குதிரைகள் வந்து சேரும் தேதியை அரசனுக்குச் சொன்னார். குறித்த நாளில் குதிரைகள் வந்து சேரவில்லை. அரசன், சேவகரை ஏவிப் பொருளை அமைச்சரிடமிருந்து பெற்று வரும்படி கட்டளை யிட்டான். சேவகர் சென்று பொருள் தரும்படி வருத்தினார்கள். அமைச்சர் கடவுளை வேண்டினார். அன்று மாலை குதிரைத் திரள் பாண்டி நாட்டிற்கு வந்து சேர்ந்தது. பாண்டியன் மகிழ்ந்து அமைச்சரைத் துன்புறுத்தாமல் விட்டான். ஆனால், வந்த குதிரைகள் அன்று இரவிலேயே நரியைப் போல் ஊளையிட்டுக் கொண்டு ஓடி மறைந்தன. அதனை அறிந்த அரசன், அமைச்சர் மாயம் செய்து ஏமாற்றினார் என்று அவரை, கடும் வெயிலில் நிறுத்தியும் புளியம் வளாரால் அடித்தும் வருத்தினான். அப்போது, வைகை ஆற்றில் வெள்ளம் பெருகிவந்து ஊரை அழிக்கும் நிலையில் இருந்தது. அச்சமயத்தில் அரசன் வாதவூரரை விடுதலை செய்து விட்டான்.

வாதவூரர் திருப்பெருந்துறை முதலிய திருப்பதிகளுக்குச் சென்று திருவாசகப் பாக்களை அருளிச்செய்தும் திருக் கோவையாரை இயற்றியும் பக்தி செலுத்தினார். சிதம்பரத்தில் ஈழ நாட்டரசன் மகளான ஊமைப் பெண்ணைப் பேசச் செய்தார் என்றும் பௌத்தரை வாதில் வென்றார் என்றும் இவர் வரலாறு கூறுகிறது. இவர் திருவாக்குகள் மாணிக்கம் போன்றிருந்தபடியால் மாணிக்கவாசகர் என்னும் பெயர் இவருக்கு வழங்கப்பட்டது. பட்டினத்துப் பிள்ளையார், மாணிக்க வாசகரை பெருந்துறைப்பிள்ளை என்று கூறுகிறார். இவர், தமது முப்பத்திரண்டாவது வயதில் சிவகதியடைந்தார்.

இவர், அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் இருந்தவர் என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. பரஞ்சோதி முனிவர் ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர். பழைய திருவிளையாடற் புராணம் (பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றியது), வாதவூரடிகள் காலத்தில் இருந்த பாண்டியன் பெயரைக் கூறவில்லை. புதிய திருவிளையாடல் புராணம், வாதவூரடிகள் அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் இருந்தவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பரஞ்சோதியார் திருவிளையாடல் புராணம், சரித்திர ஆராய்ச்சி, கால ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற நூல் அன்று. பெரும்பற்ற நம்பி இயற்றிய திருவிளையாடல் புராணம், சரித்திர ஆராய்ச்சிக்கு