பக்கம் எண் :

164மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

சேர நாட்டில் ஆரம்பொழி என்னும் ஊரில் இருந்த வீரகல். இவ் வீரகல்லை, மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கண்டுபிடித்து அதைக் கொண்டுவந்து திருவனந்தபுரம் காட்சி சாலையில் வைத்தார். இதன் ஒரு பக்கத்தில் ஒரு வீரன் இடது கையில் வில்லையும், வலது கையில் கட்டாரியையும் பிடித்துக் கொண்டு நிற்பதுபோல, புடைப்புச் சிற்பம் இருக்கிறது. பின்புறத்தில் கீழ்க்கண்ட சாசனம் வட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

“ஸ்ரீ கோமாறஞ்சடையற் கிருபத்தேழாமாண்டு சேரமானார் படை விழஞத்து புறத்து விட்டுழக்க கரைக்காட்டை அழிப்பான் வர பெருமானடிகளன்பு மிக்குள இரணகீர்த்தியு அமர்க்கழிஉம் உள்ளீட்டி னொற்றைச் சேவர் கோட்டை யழியாமைக் காத்தெறிந்து பலரும்பட்ட இடத்து இரணகீர்த்தி உள்வீட்டுச் சேவகன் கொழுவூர்க் கூற்றத்துப் பெருவூர்த் தாதம் பெருந்திணை ஆத்திரத்தாற் பலரோடுங் குத்திப் பட்டான்...........”8

போர்க்களத்தில் வீரங்காட்டியவர்களுக்கு மட்டுந்தான் வீரக்கல் நடப்பட்டது என்று கருதவேண்டா. புலிகளுடன் போராடி உயிர்விட்ட வீரர்களுக்கும் நடுகற்கள் அமைக்கப்பட்டன. பண்டைக்காலத்துத் தமிழர் வீரச்செயலைப் போற்றும் பண்பினர் ஆகையால், எத்தகைய வீரர்களுக்கும், நடுகற்கள் நட்டுச் சிறப்புச் செய்தார்கள். புலியுடன் போராடுவது, மனிதருடன் போர் செய்வதைவிட அதிக வீரமான செயல். இக்காலத்தில் யானைகளின்மேல் அமர்ந்து, பல பாதுகாப்பான சூழ்நிலைகளுடன் தூரத்தில் இருந்து கொண்டு துப்பாக்கியினால் சுட்டுப் புலிகளைக் கொல்லும் வேட்டையன்று பண்டைக்காலத்துப் புலிவேட்டை. நேருக்கு நேர் புலியுடன் நின்று போரிட வேண்டும். அவ்வாறு புலிகளுடன் போராடி உயிர்விட்ட வீரர்களுக்கும் நடுகல் நட்டுப் பாராட்ட வேண்டியதுதானே. ஆகவே, வீரத்தைப் போற்றிப் பாராட்டிய அக்காலத் தமிழர் அவர்களுக்கும் நடுகல் நட்டனர். அவ்வீர கற்கள் சிலவற்றைக் காட்டுவோம்.

வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகா கீழ்முத்துக்கூர். (இவ்வூரின் பழைய பெயர் முக்குத்தூர்.) இங்குள்ள ஒரு நடுகல்லில் ஒரு வீரன் தனித்து நின்று கட்டாரியினால் ஒரு புலியைக் குத்தி கொல்வது போன்று புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இதிலுள்ள சாசன வாசகம் இது: