| பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 165 |
“ஸ்ரீ மதுரை கொண்ட கோப்சரகேசரிவன்மற்கு யாண்டு முப்பத்து இரண்டாவது. வடகரை முக்குத்தூர் குமாரனடி புழலப்பன் புலிகுத்தின கரைநாடு”.9 கோவிலூர் சிவன் கோவிலில் உள்ள நடுகல் சாசனம் ஒன்று, புலிவேட்டையில் வில்லி ஒருவர் புலியுடன் பொருது உயிர்விட்டதைக் கூறுகிறது.10 தமிழ் நாடாக இருந்து இப்போது ஆந்திர தேசத்துடன் இணைந்துபோன சித்தூர் மாவட்டத்துப் புங்கனூர் தாலுகா எடூரு என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு அப்பால் சிறிது தூரத்தில் ஒரு வயலில் உள்ள புலிராயி என்னும் புலிக்கல். தமிழ்ச் சாசனம். குலோதுங்கசோழனுடைய 39 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ஜயங்கொண்ட சோழமண்டலத்து பெரும் பாணப்பாடி புலிநாட்டு இடையூர் ஆன சென்பியன் ஸ்ரீகரநல்லூரில் இருந்த வில்லி அபிமான முத்தரையன் மகன் மாச்சன் என்பவன் ஒரு புலியுடன் பொருது அதனைக் குத்திக் கொன்று தானும் இறந்தான் என்னும் செய்தியை இவ்வீரக்கல் சாசனம் கூறுகிறது. வீரபல்லி அரசனான குமாரபல்லி அரசன் சாலிவாகன சகாப்தம் 1289இல் (கி.பி. 1367 இல்) எழுதிய வீரகல் சாசனம். இவர் 150 புலிகளைக் கொன்றதாக இச்சாசனம் கூறுகின்றது.11 “ஸ்வஸ்திஸ்ரீ. சகாப்தம் ஆயிரத்து இருநூற்று எண்பத் தொன்பதின்மேல் செல்லா நின்ற பிலவங்க சம்பவத்சரத்து விருஷப ஞாயற்று பூர்வபக்ஷத்து பிரதமையும் சனிக்கிழமையும் பெற்ற ரோஹிணி. நாம் தியாக சமுத்திரப்பட்டை அயோத்யாபுர வாரத்சர ஆபீரராய மாநமர்த்தன் அவிராய மானமர்த்தன் இராயகண்ட பேருண்ட பங்களராய பங்கள சக்கரவர்த்தி சுரியக்கார மகாமகேஸ்வர மத்யம தேசாதிபதி வீரஸ்ரீ வீரபல்லி அரசர் குமாரபல்லி அரசர் நான் இந்நாள்வரைக்கும் கொன்ற புலி நூற்றைம்பது.”12 உதாரணத்துக்காகச் சில நடுகற்களை மட்டும் இங்குக் காட்டினோம். இதுபோன்று நூற்றுக்கணக்கான வீரக்கற்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றன. அவைகளை எல்லாம் கூறினால் தனி நூலாகும் என்று அஞ்சிக் கூறாமல் விட்டனம். |