பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 187 |
‘வானம் ஊன்றி மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை.’ (பெரும்பாணாற்றுப்படை 346-351) இதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் எழுதிய உரை: ஆகாயத்தே திரிகின்ற தேவருலகுக்கு முட்டுக் காலாக ஊன்றிவைத்த ஒரு பற்றுக் கோடு போல விண்ணைத் தீண்டும்படி யோங்கின மாடம். தன்னிடத்துச் சாத்திய ஏணியால் ஏறுதற்கரிய தலையினையுடைய மாடம். கற்றை முதலியவற்றால் வேயாது சாந்திட்ட மாடத்தை, இராக்காலத்தே கொளுத்தின விளங்குகின்ற விளக்கு, உலாவுகின்ற கடற்பரப்பிலே வந்து, நாம் சேரும் துறையன்றென்று நெகிழ்ந்து வேறோர் துறைக்கண் ஓடுங்கலங்களை இது நந்துறை என்றழைக்கின்ற துறை.’) காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த கலங்கரை விளக்கமும் இதுபோன்று அமைந்த செங்கற் கட்டடமாக இருந்திருக்க வேண்டும்.1 இதனால், கலங்கரை விளக்கக் கட்டடம் செங்கல்லினால் அமைக்கப்பட்டுச் சாந்து பூசப்பெற்ற காரைக் கட்டடம் என்பது தெரிகின்றது. எகிப்து நாட்டிலே, நீல நதி, மத்திய தரைக்கடலில் கலக்கிற இடத்திலே அமைந்திருந்த அலெக்சாந்திரியத் துறைமுகத்தில் அமைந்திருந்த கலங்கரை விளக்கம் இங்கு நினைவுறத்தக்கது. சுடுகாடு பிறப்பும் இறப்பும் எல்லா ஊர்களிலும் எக்காலத்திலும் நிகழ்கிற நிகழ்ச்சி. இறந்தவர்களைப் புதைக்கவும் கொளுத்தவும் ஒவ்வொரு ஊரிலும் சுடுகாடு உண்டு. காவிரிப்பூம்பட்டினத்தின் சுடுகாடு நகரத்துக்கு வடக்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. சுடுகாட்டின் அருகிலே காடமர் செல்வியாகிய கொற்றவையின் கோயில் இருந்தது. மேலும் சுடுகாட்டிலே, வாகை மரத்தின் அடியில் வாகை மன்றமும், விளாமரத்தின் அடியில் வெள்ளில் மன்றமும், இலந்தை மரம் இருந்த இரத்திமன்றமும் வன்னிமரம் இருந்த வன்னிமன்றமும், வெளியான இடத்தில் இருந்த வெள்ளிடை மன்றமும்2 என ஐந்து மன்றங்கள் இருந்தன. |