188 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
சம்பாபதி கோவில் சுடுகாட்டுக்கு அருகில் சம்பாபதி கோவில் இருந்தது. இந்தக் கோவிலுக்குக் குஞ்சரக் குடிகை (குச்சரக் குடிகை) என்னும் பெயர் உண்டு. இங்குச் சம்பாபதி தெய்வம் வழிபடப்பட்டது. சம்பாபதிக் குக் கன்னி, குமரி, முதியாள் என்று பல பெயர்கள் உண்டு. சுடுகாட்டுக்குத் தென்புறத்துச் சுவருக்குத் தென்புறத்தில் (நாளங்காடிக்கு வடக்குப் புறத்தில்) இருந்த உவவனம் என்னும் பௌத்த ஆராமத்துக்கும் சம்பாபதி கோவிலுக்கும் ஒரு வழி இருந்தது. உவவன ஆராமத்தின் மேற்குப் பக்கத்தில் கோட்டைச் சுவரைச் சார்ந்து சிறுவாயில் இருந்தது. அந்த வாயில் வழியாக மேற்குப் பக்கம் சென்றால் சம்பாபதி கோவிலை யடையலாம். உவவனத்துக்குச் சென்ற சுதமதி என்பவள், உவவனத்திலிருந்து இந்த வாயில் வழியாகச் சக்கரவாளக் கோட்டமாகிய சம்பாபதிக் கோவிலுக்கு வந்தாள் என்று ‘மணிமேகலை’ கூறுகிறதிலிருந்து இதனை யறியலாம். ‘பெருந்தெரு ஒழித்துப் பெருவனஞ் சூழ்ந்த திருந்தெயில் குடபால் சிறுபுழைபோகி மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கர வாளக் கோட்டம் புக்காற் கங்குல் கழியினும் கடுநவை எய்தாது’ என்றும், (சக்கரவாளக்கோட்டம் 21-25) ... .. ... .. ... .. ... .. ... .. ... .. பூம்பொழில் திருந்தெயிற் குடபால் சிறுபுழை போகி மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த சக்கர வாளக் கோட்டத் தாங்கட் பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் உலக வறிவியின் ஒருபுடை யிருத்தலும்’ என்றும் மணிமேகலை (துயிலெழுப்பிய காதை 88-93) கூறுவது காண்க. சம்பாபதி கோவிலுக்குச் சுடுகாட்டுக் கோட்டம் என்றும் சக்கர வாளக் கோட்டம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்தபடியால் சுடுகாட்டுக்கோட்டம் என்று பெயர் வந்தது. |